search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவின் தாக்குதலுக்கு பலியான இரட்டைக் குழந்தைகளின் தாய்
    X
    கொரோனாவின் தாக்குதலுக்கு பலியான இரட்டைக் குழந்தைகளின் தாய்

    கொரோனா தாக்குதலுக்கு இரட்டை குழந்தைகளின் தாய் பலி - அறிகுறி தெரிந்த 4 நாட்களில் உயிர் இழந்த பரிதாபம்

    இங்கிலாந்து நாட்டில் கொரோனாவின் கொடிய தாக்குதலுக்கு இரட்டைக் குழந்தைகளின் தாய் ஒருவர் பலியானார். அறிகுறிகள் தெரிந்த 4 நாட்களிலே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் நியூமார்ஸ்கி என்ற பகுதியில் உள்ள தீசைடு என்ற நகரத்தை சேர்ந்தவர், கரோலைன் சான்பை (48) இரட்டைக் குழந்தைகளின் தாய். மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்.

    அவருக்கு கடந்த 26-ந் தேதி தொண்டையில் வலி ஏற்பட்டது. அதை அவர் சாதரணமாக எடுத்துக் கொண்டார். ஓரிரு நாட்களில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மூச்சுவிட போராடும் நிலை ஏற்பட்டது.

    உடனடியாக அவரை விமான ஆம்புலன்ஸ் மூலம் மிடில்பிரோவில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கரோலைனுக்கு, கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலன்தராமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிர் இழந்தார்.

    நோய் அறிகுறிகள் தெரிந்த 4 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது அவருடைய குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல டாக்டர்களுக்கும் அதிர்ச்சி தந்து இருக்கிறது. கரோலைனின் கணவர் பெயர் விக். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஜோசப், எலியட் என்ற இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால் கரோலைனும் அவருடைய சகோதரி சாரா சார்விஸ் என்பவரும் இரட்டையர்கள் ஆவார்கள்.

    சகோதரியின் மறைவால் சாரா, மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார்.

    “தன்னுடைய சகோதரி மிகவும் அன்பானவள். 2 குழந்தைகளிடமும் கணவரிடமும் மகிழ்ச்சியாக இருந்தாள். யாரிடமும் கடிந்து பேசமாட்டாள். அவளுக்கு எந்த நோயும் இல்லை. 4 நாட்களில் எங்களைவிட்டு பிரிந்துவிட்டாளே” என்று வருதத்துடன் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, “வயதானவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்பது அல்ல அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்” என்றார். அவருடைய சகோதரியின் மருத்துவ செலவுக்கு உதவி கோரி இருந்தார்கள். பல்வேறு தரப்பில் இருந்து ரூ.13 லட்சம் வரை உதவி கிடைத்தது.

    அதேப்போன்று இங்கிலாந்தில் போல்டன் என்ற இடத்தில் 66 வயது பெண் கொரோனா தாக்கி பலியானார். சமூகச் சேவகியான அவரது பெயர் லிண்டாதுப்பென். அவருடைய 28 வயது ரோப் என்ற மகனுக்கு கொரோனா தொற்று இருந்தது. மகனை அவர் கவனித்து வந்தார். மகனுக்கு குணமாகிவிட்டது. ஆனால் அவர் பலியாகிவிட்டார்.

    அவருடைய 23 வயதுடைய இளைய மகனுக்கு தற்போது வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
    Next Story
    ×