search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இவான்கா டிரம்ப்
    X
    இவான்கா டிரம்ப்

    மோடி பகிர்ந்த யோகா வீடியோவுக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு

    பிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட யோகா வீடியோ அற்புதமானது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளான இவான்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    பிரதமர் மோடி இந்திய நாட்டு மக்களிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ‘மன்கிபாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் பேசினார்.

    அப்போது அவரிடம், “இந்த 21 நாள் ஊரடங்கு காலத்திலும் எப்படி உடலை நல்ல தகுதியுடன் வைத்திருக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “நினைவில் கொள்ளுங்கள். நான் உடற்பயிற்சி வல்லுனர் அல்ல. நான் யோகா ஆசிரியரும் அல்ல. நான் வெறுமனே யோகா பயிற்சி செய்து கொண்டு வருபவன்தான். சில யோகாசனங்கள் எனக்கு பெரிதும் பலன் அளித்து இருக்கின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் சில குறிப்புகள் உங்களுக்கும் பலன் தரக்கூடும்” என கூறினார். இது தொடர்பான வீடியோ பகிரப்படும் எனவும் தெரிவித்தார்.

    அதன்படி அவர் நேற்றுமுன்தினம் டுவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.

    பிரதமர் மோடி

    அதில் அவர் வெளியிட்ட பதிவில், “எனக்கு நேரம் கிடைக்கிற போதெல்லாம் வாரத்துக்கு ஒன்றல்லது இரண்டு முறை யோகா நித்ரா பயிற்சி செய்கிறேன். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்கிறது. இணையதளத்தில் நிறைய யோகா நித்ரா பயிற்சி வீடியோக்களை நீங்கள் பார்க்க முடியும். நான் ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒரு வீடியோவை பகிர்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த ஆலோசகரும், அவரது மகளுமான இவான்கா டிரம்ப் பார்த்துள்ளார்.

    இதையொட்டி அவர் ‘ரீடுவிட்’ செய்துள்ளார். பிரதமர் மோடியின் வீடியோவுக்கு பாராட்டு தெரிவித்து கருத்தும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இது அற்புதமானது. நரேந்திரமோடி அவர்களே, நன்றி. பிரிவிலும் இணைந்திருப்போம்” என்று கூறி உள்ளார்.

    அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித்சிங் சந்துவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உடலையும், உள்ளத்தையும் ஒத்திசைவாக வைத்திருக்க யோகா உதவுகிறது. நமது பிரிவில் கூட, பிரதமர் நரேந்திர மோடி, நாம் ஒன்றாக இருக்கவும், யோகா மூலம் விழிப்புணர்வுடன் இருக்கவும் வழிநடத்துகிறார்” என கூறி உள்ளார்.

    அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாவே யோகா பயிற்சியை பலரும் விருப்பமுடன் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடியின் முயற்சியினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதியன்று சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இப்போது அவர்கள் ஆர்வத்துடன் யோகா பயிற்சி மேற்கொள்வது அதிகரித்து இருப்பதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
    Next Story
    ×