search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷிய அதிபர் புதின்
    X
    ரஷிய அதிபர் புதின்

    ரஷிய அதிபர் புதினை சந்தித்த டாக்டருக்கு கொரோனா

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த டாக்டருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
    மாஸ்கோ:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

    உலகம் முழுவதும் இந்த வைரஸ் இதுவரை 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 ஆயிரத்து 107 பேர் உயிரிழந்துள்ளனர். 

    ரஷியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 337 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, மாஸ்கோவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) ரஷிய அதிபர் சென்றார். 

    அங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் என பல்வேறு மருத்துவ ஊழியர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினர். அப்போது அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டென்னிஸ் புரோட்சென்கோவிடமும் அவர் பேசினார். 

    டெனிசிடம் பேசும்போது அதிபர் புதின் எந்த வித முகமூடியும் அணியாமலும், கைகளை குலுக்கியும் சாதாரணமாக நடந்துகொண்டார். 

    டாக்டர் டென்னிஸ் புரோட்சென்கோவுடன் கைகுலுக்கும் விளாடிமிர் புதின்

    இந்நிலையில், புதினுடன் பேசிய மருத்துவ தலைமை டாக்டர் டென்னிஸ் புரோட்சென்கோவுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    இதையடுத்து டென்னிஸ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் தற்போது அவரது நிலைமை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்ந்து மருத்துவபரிசோதனைகள் செய்துவருவதாகவும் அவர் நல்ல  உடல்நிலை இருப்பதாகவும் கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    புதினை சந்தித்த டாக்டருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரஷியாவில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
    Next Story
    ×