search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    கொரோனா பீதிக்கு இடையில் ஏவுகணை மூலம் வடகொரியா மீண்டும் மிரட்டல்

    அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் மவுனித்து வைத்திருந்த வடகொரியா அரசு கொரோனா வைரஸ் பீதிக்கு இடையில் இரு ஏவுகணைகளை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
    பியாங்யாங்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் பன்மடங்காக அதிகரித்துவரும் நிலையில் வடகொரியா அரசு இதுவரை இந்த வைரஸ் தொற்று தொடர்பாக வெளிப்படையாக எந்த புள்ளிவிவரத்தையும் வெளியிடவில்லை.

    எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தை முழுவீச்சில் கட்டுப்படுத்தும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6.45 மற்றும் 6.50 மணிக்கு அடுத்தடுத்து இரு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாக தென்கொரியா ராணுவ வட்டாரம் தெரிவித்தது. இந்த ஏவுகணைகள் 50 கிலோமீட்டர் உயரத்தில் சுமார் 410 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிம் ஜாங் அன் - டொனால்ட் டிரம்ப்

    வடகொரியாவிடம் உள்ள ஆபத்தான ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய இருசுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த 2019-ம் ஆண்டில் தோல்வியில் முடிந்தபின்னர், இதுபோல் அத்துமீறிய ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா அரசு சிலமுறை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய பரிசோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியா அரசு உலகநாடுகள் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக பதற்றத்தில் உள்ள நிலையில் இதுபோன்ற தேவையற்ற ஏவுகணை பரிசோதனை இந்த நேரத்துக்கு உகந்ததல்ல என குற்றம்சாட்டியுள்ளது.

    Next Story
    ×