search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டுவிட்டர்
    X
    டுவிட்டர்

    கொரோனா வைரஸ் : ‘டுவிட்டர்’ ஊழியர்கள், வீட்டில் இருந்து பணியாற்றலாம் - நிர்வாகம் அறிவுறுத்தல்

    கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து ‘டுவிட்டர்’ ஊழியர்கள் அலுவலகம் வராமல் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
    சான் பிரான்சிஸ்கோ:

    கடந்த டிசம்பர் மாதம், சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் பரவி விட்டது. நேற்றைய நிலவரப்படி, இதற்கு சாவு எண்ணிக்கை 3 ஆயிரத்து 100-ஐ தாண்டி விட்டது. 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அமெரிக்காவிலும் கொரோனா வைரசுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 2 பேர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்ற நாடுகளைப் போல், அமெரிக்காவும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனங்களும் உ‌ஷார் நடவடிக்கையை பின்பற்ற தொடங்கி உள்ளன. பிரபல சமூக வலைத்தளமான ‘டுவிட்டரின்’ தலைமை அலுவலகம், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது.

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு ‘டுவிட்டர்’ ஊழியர்களை அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதுகுறித்து ‘டுவிட்டர்’ மனிதவள பிரிவின் தலைவர் ஜெனிபர் கிறிஸ்டி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மார்ச் 2-ந் தேதியில் இருந்து, உலகம் முழுவதும் ‘டுவிட்டர்’ ஊழியர்களை அவரவர் வீடுகளில் இருந்தே பணியாற்ற நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். நமக்கும், நம்மை சுற்றி உள்ள உலகத்துக்கும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை குறைப்பதுதான் நமது இலக்கு.

    தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளின் ‘டுவிட்டர்’ அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அவரவர் வீடுகளில் இருந்தபடி பணியாற்றுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ‘டுவிட்டர்’ நிர்வாகம், முக்கியத்துவம் இல்லாத வர்த்தக பயணங்களையும், நிகழ்ச்சிகளையும் கடந்த வாரத்தில் இருந்தே நிறுத்தி வைத் துள்ளது.
    Next Story
    ×