search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
    X
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

    நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் - பாகிஸ்தான் முடிவு

    தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுத பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அல் அஜிசியா மில்ஸ் ஊழல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், லண்டனில் சிகிச்சை பெற செல்ல வேண்டும் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது. அதை ஏற்று, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    மற்றொரு ஊழல் வழக்கில் அவருக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மருத்துவ அறிக்கை அடிப்படையில், இந்த ஜாமீனை அவ்வப்போது நீட்டிக்க பஞ்சாப் மாகாண அரசுக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது.

    அதையடுத்து, கடந்த நவம்பர் மாதம், நவாஸ் ஷெரீப் சிகிச்சை பெறுவதற்காக லண்டனுக்கு சென்றார். அங்கு அவர் உறவினர்களுடன் ஒரு உணவகத்தில் சாப்பிடுவது போன்ற புகைப்படம் வெளியானது. எனவே, சமீபத்தில் பஞ்சாப் மாகாண அரசு அவருக்கு ஜாமீனை நீட்டிக்க மறுத்து விட்டது. ஜாமீனை நீட்டிக்க சட்டரீதியான, தார்மீக, மருத்துவரீதியான எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தது.

    அதைத்தொடர்ந்து, நவாஸ் ஷெரீப், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுத பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் பிர்தவுஸ் ஆ‌ஷிக் அவான், லாகூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மருத்துவ காரணங்களுக்காக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த ஜாமீன் நிபந்தனைகளை அவர் பின்பற்றவில்லை. அவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டார்.

    ஆகவே, அவரை நாடு கடத்தி பாகிஸ்தானிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசுக்கு இந்த வாரம் கடிதம் எழுத கொள்கை அளவில் முடிவு செய்துள்ளோம்.

    நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, கடந்த நவம்பர் 19-ந் தேதி லண்டனுக்கு சென்றார். ஆனால் அவர் சிகிச்சைக்காக எந்த ஆஸ்பத்திரியிலும் இதுவரை சேரவில்லை. எனவே, அவரும், அவரது கட்சியும், ஊடகங்களும் நாடகம் ஆடி வருகின்றனர். தங்கள் பிள்ளைகள் செய்து வரும் வர்த்தகத்தை பாதுகாக்கவே, நவாஸ் ஷெரீப்பும், அவருடைய தம்பியும் லண்டனுக்கு சென்றுள்ளனர். நவாஸ் ஷெரீப் தனது உடல்நிலை குறித்து சொன்னது எல்லாம் பொய் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியோ, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கடிதம் எழுதுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் பஞ்சாப் மாகாண செய்தித்தொடர்பாளர் அஸ்மா பொகாரி கூறுகையில், ‘‘நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துமாறு பாகிஸ்தான் அரசு இங்கிலாந்துக்கு கடிதம் எழுதினால், இம்ரான் கானுக்கு சட்டவிரோதமாக பிறந்த குழந்தை தொடர்பான வழக்கை மீண்டும் தோண்டி எடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதுவோம்.

    நவாஸ் ஷெரீப், கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார். இதயகோளாறால் அவதிப்பட்டு வருகிறார். விரைவில் அவருக்கு இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலையை வைத்து விளையாடாமல், இம்ரான் கான் அரசு, தேச பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்‘‘ என்றார்.

    ஜாமீனை நீட்டிக்க முடியாது என்ற பாகிஸ்தான் அரசின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் வழக்கு தொடருவார் என்று அவரது கட்சியின் மற்றொரு நிர்வாகி கூறினார்.
    Next Story
    ×