search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் துணை சுகாதார மந்திரி இராஜ் ஹரீர்ச்சி
    X
    ஈரான் துணை சுகாதார மந்திரி இராஜ் ஹரீர்ச்சி

    ஈரான் துணை சுகாதார மந்திரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

    ஈரான் துணை சுகாதார மந்திரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
    தெஹ்ரான்:

    சீனாவின் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வுகானில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 

    கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 2,663 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, ஈரான் நாட்டின் வடக்கே அல்போர்ஜ் மாகாணத்தில் 2 மூதாட்டிகள் மற்றும் மர்காஜி என்ற மத்திய மாகாணத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஈரானில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரானில் துணை சுகாதார மந்திரியாக இருந்து வருபவர் இராஜ் ஹரீர்ச்சி. அவர் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். 

    இந்த சந்திப்பில், அந்நாட்டு சட்டசபை உறுப்பினர் ஒருவர், ஷியா பிரிவு முஸ்லிம்களின் புனித நகரான குவாம் நகரில் 50 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர் எனக்கூறினார்.  ஆனால் இதனை மறுத்த இராஜ், இந்த எண்ணிக்கை உண்மை என நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலக தயாராக உள்ளேன் என்றார்.

    இராஜ் பேசும்பொழுது அடிக்கடி இருமியபடியும் மற்றும் அடிக்கடி அவருக்கு வியர்த்துக் கொட்டியபடியும் இருந்தது.  இவருக்கு ஊடக ஆலோசகராக அலிரிஜா வஹாப்ஜடே இருந்து வருகிறார்.

    இந்நிலையில், வஹாப்ஜடே வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரசை ஒழிப்பதில் முன்னின்று பணியாற்றி வரும் துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×