search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன நாடாளுமன்ற கூட்டம்
    X
    சீன நாடாளுமன்ற கூட்டம்

    பல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைப்பு

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,600-ஐ நெருங்கிவிட்ட நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 2,592 ஆக உயர்ந்தது. வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை தாண்டியது. சுமார் 50 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    9,915 பேர் இன்னும் மோசமான நிலையில் உள்ளனர். 24,734 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    சீன நாடாளுமன்றத்தின் 3-வது வருடாந்திர கூட்டத்தொடர் மார்ச் மாதம் 5-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. வழக்கமாக 2 வாரங்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், பட்ஜெட் நிறைவேற்றுதல், புதிய கொள்கைகளை சேர்த்தல், புதிய சட்டங்கள் இயற்றுதல் ஆகிய பணிகள் நடைபெறும்.

    ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகமோசமாக இருப்பதால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைக்க ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சி முடிவுசெய்துள்ளது. நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினர்கள் நேற்று கூடி இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தனர்.

    கொரோனா பாதுகாப்பு பணியில்

    இப்படி நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைப்பது வழக்கத்திலேயே இல்லாதது, நாட்டில் சீர்திருத்தங்கள் மேற்கொண்ட பின்னர் இது நடைபெறவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எனவே பல ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்த கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் நிபுணர்கள் குழு நேற்று உகான் நகரில் கள விசாரணையில் ஈடுபட்டனர். ஆஸ்பத்திரிகளுக் கும் சென்று பார்வையிட்டனர்.

    வைரஸ் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உகான் நகரில் நடமாடவும், போக்குவரத்துக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இப்போது அந்த கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்பட்டது.

    உகானில் இருக்கும் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் நகரைவிட்டு வெளியேறலாம் என அரசு அறிவித்துள்ளது. வைரஸ் அறிகுறி இல்லாதவர்களும், நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளாதவர்களும் மட்டும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    கொரோனா தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய சீன அதிபர் ஜின்பிங், “வைரஸ் வேகமாக பரவுவதாலும், பாதிப்பு பரவலாக இருப்பதாலும் இதனை தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் கடினமாக உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் இந்த தாக்கம் கட்டுப்படுத்தக்கூடியது, குறுகியகாலம் மட்டுமே இருக்கும்” என்றார்.

    பல்வேறு வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி உள்ளது. ஈரானில் நேற்று மேலும் 4 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானார்கள். இதனால் ஈரானில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×