search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டைமண்ட் பிரின்சஸ் கப்பல்
    X
    டைமண்ட் பிரின்சஸ் கப்பல்

    ஜப்பான் கப்பலில் தவிக்கும் மும்பை பெண் ஊழியரை மீட்க பிரதமருக்கு தந்தை வேண்டுகோள்

    ஜப்பான் கப்பலில் தவிக்கும் மும்பை பெண் ஊழியரை மீட்டுத் தருமாறு பிரதமர் மோடிக்கு அவரது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    டோக்கியோ:

    ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3700 பயணிகளுடன் புறப்பட்ட டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதனால் அந்த கப்பலை ஜப்பான் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. யோகா ஹமா பகுதியில் கடந்த 4-ந் தேதி முதல் அந்த கப்பல் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்த கப்பலில் உள்ளவர்களில் 138 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களில் 8 பேர் உள்பட கப்பலில் உள்ள பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கப்பலில் உள்ள பயணிகள் பலரும் டுவிட்டர் பக்கத்தில் தங்களது பயத்தையும், நிலைமையையும் பதிவிட்டு வருகின்றனர். கப்பலில் உள்ள பயணிகளில் மும்பை தானேவை சேர்ந்த சோனாலி தாக்கர் என்ற பெண் ஊழியரும் ஒருவர் ஆவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்த கப்பலில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை தினேஷ் தாக்கர் தனது மகளை மீட்டுத்தருமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தை அவர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    என் மகள் சோனாலி தாக்கர், யோகா காமா துறைமுகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கிறார். இந்த வைரஸ் தொடர்பாக அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆகி இருக்கிறது. என் மகள் 15 நாட்களாக சிறிய அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இந்த வைரசால் பாதிப்படைந்த பயணிகளுடன் என் மகளும் இருப்பதால் அவருடைய வாழ்க்கையும் ஆபத்தில் உள்ளது. என்னுடைய மகளை இந்தியாவுக்கு அழைத்து வர அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×