search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் பயன்படுத்தும் பெண் (கோப்பு படம்)
    X
    செல்போன் பயன்படுத்தும் பெண் (கோப்பு படம்)

    தலிபான் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் தொடக்கம்

    ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்போன் தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது. 

    பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். 

    மேலும், தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களை சேதப்படுத்தியும், அங்கு பணிபுரியும் நபர்களை கடத்தி கொலை செய்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவந்தனர். 

    இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்  செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்த முடியாமல் தவித்துவந்தனர். 

    2001 முதல் நடைபெற்றுவரும் இந்த உள்நாட்டு போரில் தலிபான் பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். 

    அமைதி ஒப்பந்தத்தை கொண்டாடும் ஆப்கன் மக்கள்

    இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. 

    இந்த பேச்சுவார்த்தையின் மூலம் வரும் 29-ம் தேதி அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்கவும், தலிபான் பயங்கரவாத அமைப்பு அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. 

    இதற்காக ஒரு வார காலம் சண்டை நிறுத்தம் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனால் தலிபான் தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், அந்நாட்டில் தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 5 ஆண்டுகளாக செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த செல்போன் தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

    சுமார் 730-க்கும் அதிகமான செல்போன் கோபுரங்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்நாட்டு தொலை தொடர்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×