search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை (கோப்பு படம்0
    X
    வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை (கோப்பு படம்0

    ஈரானில் கொரோனா தாக்கி மேலும் இருவர் பலி - இஸ்ரேலிலும் பரவத்தொடங்கிய வைரஸ்

    ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 18 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    தெஹ்ரான்:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. 

    இந்த வைரஸ் பாதிப்பிற்கு 2 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 75 ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

    ஹூபேய் மாகாணத்தில் வைரஸ் பரவத்தொடங்கியது முதல் அங்கு வசித்துவந்த வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றுவருகின்றனர். அவ்வாறு அழைத்துசெல்லப்படும் நபர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுமார் 60 ஈரான் மாணவர்கள் சொந்த நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். 

    மேலும், அவர்கள் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பிற்கு பிறகு வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

    கோப்பு படம்

    இதற்கிடையில், ஈரான் நாட்டில் ஆன்மீக தலம் அதிகம் உள்ள ஹிய்ம் நகரை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். 

    அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. ஆனால் வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

    இதனால் கொரோனா வைரசுக்கு ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 18 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலிலும் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு தனி அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×