search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங்கில் பெண் ஒருவர் தனது குழந்தைகளுக்கு முககவசம் அணிவித்து அழைத்து செல்லும் காட்சி.
    X
    ஹாங்காங்கில் பெண் ஒருவர் தனது குழந்தைகளுக்கு முககவசம் அணிவித்து அழைத்து செல்லும் காட்சி.

    சீனாவில் 2118 பேர் பலி- கொரோனா வைரஸ் பரவுவது குறையத் தொடங்கியது

    கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அளவில் குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் கொரோனா வைரசால் புதிதாக 1749 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.

    ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் தோன்றிய அந்த வைரஸ் தற்போது 31 மாகாணங்களில் பரவி உள்ளது.

    கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

    குறிப்பாக ஹுபெய் மாகாணம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

    மேலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.

    நேற்று ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 108 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆயிர்து 118 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அளவில் குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் கொரோனா வைரசால் புதிதாக 1749 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    நேற்று 394 பேர் மட்டும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள ஹுபெய் மாகாணத்தில் 349 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை 74 ஆயிரத்து 576 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதில் வுகான் நகரில்தான் அதிக பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு ஒவ்வொரு வீடாக மருத்துவ அதிகாரிகள் சென்று மக்களை பரிசோதித்து வருகிறார்கள்.

    4 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஹுபெய் மாகாணத்தில் 62 ஆயிரத்து 31 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஹுபெய் மாகாணம் மற்றும் வுகான் நகரில் தொடர்ந்து 16 நாட்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது சீன அதிகாரிகளை சற்று நிம்மதி அடைய செய்துள்ளது.

    நேற்று ஆயிரத்து 739 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.
    Next Story
    ×