search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கப்பலில் இருந்து வெளியே வந்த பயணிகள்
    X
    கப்பலில் இருந்து வெளியே வந்த பயணிகள்

    கொரோனா வைரஸ்... 14 நாட்களுக்கு பிறகு ஜப்பான் கப்பலை விட்டு வெளியேறும் பயணிகள்

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானில் நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள பயணிகள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு இன்று கப்பலை விட்டு வெளியேறத் தொடங்கி உள்ளனர்.
    யோகாஹாமா:

    சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்  உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு 2000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 75 ஆயிரம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

    இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் இருந்த சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்தது. இதனையடுத்து 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என 3,711 பேருடன் அந்த கப்பல் யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. 

    டயமண்ட் பிரின்சஸ் கப்பல்

    பின்னர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்களை கப்பலில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்புக்கு பிறகு அவர்கள் இன்று கப்பலில் இருந்து வெளியேறத் தொடங்கினர். இன்று சுமார் 500 பேர் மட்டுமே வெளியேறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதன்பின்னர் மருத்துவ பரிசோதனை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வருவதைப் பொருத்து, அனைத்து பயணிகளும் வெளியேற இன்னும் மூன்று நாட்கள் வரை ஆகலாம் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×