search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம் (கோப்புப்படம்)
    X
    எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம் (கோப்புப்படம்)

    இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் மூண்டால் 12½ கோடி பேர் பலியாகும் ஆபத்து

    இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் மூண்டால் 12½ கோடி பேர் பலியாகும் ஆபத்து உள்ளதாக ஜெர்மனி ஆய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    கா‌‌ஷ்மீரில் உள்ள புல்வாமாவில், விடுமுறை முடிந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி பணிக்கு திரும்பிக்கொண்டிருந்த துணை ராணுவத்தினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தினர்.

    ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மனித வெடிகுண்டைக்கொண்டு நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற ஜெய்‌‌ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்த தாக்குதல், நாடு முழுவதும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்த தாக்குதல் நடந்து 12 நாட்கள் ஆன நிலையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் அதிரடியாக பறந்து சென்று, பாலகோட்டில் உள்ள ஜெய்‌‌ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாமை குண்டுகள் போட்டு அழித்தன.

    அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் போர் பதற்றம் நீடிக்கிறது.

    புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில் ஜெர்மனியில் ‘தி முனிச் பாதுகாப்பு அறிக்கை-2020’ என்ற ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது.

    இதில் கூறி இருப்பதாவது:-

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு தரப்பு ராணுவங்களும் அவ்வப்போது மோதிக்கொண்டுள்ளன.

    இந்த சூழலில், கா‌‌ஷ்மீரில் நடத்தப்படுகிற ஒரு பயங்கரவாத தாக்குதல்கூட இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதனால் அணு ஆயுத நாடுகளான இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ மோதல்கள் ஏற்படலாம்.

    இரு நாடுகளிலும் 100 முதல் 150 அணு ஆயுதங்கள் இருக்கக்கூடும்.

    இரு நாடுகள் இடையே 2025-ல் போர் நடந்தால், இந்த போரில் 15 ஆயிரம் டன் முதல் 1 லட்சம் டன் வரையில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம்.இதனால் 1 கோடியே 60 லட்சம் டன் முதல் 3 கோடியே 60 லட்சம் டன் வரையில் கருப்பு கார்பன் புகை வெளியாகும். சூரிய ஒளியின் அளவு 20 முதல் 35 சதவீதம் குறையும். நிலத்தில் பயிர்கள் உற்பத்தி திறன் 15 முதல் 30 சதவீதம் பாதிக்கும். கடல் உற்பத்தி 5 முதல் 15 சதவீதம் குறையும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களின் உயிரிழப்பை பொறுத்தமட்டில் 5 கோடி முதல் 12½ கோடி பேர் உடனடியாக உயிரிழக்கும் ஆபத்து இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×