search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த மருத்துவமனை இயக்குனர் லியூ ஹிம்மிங்
    X
    உயிரிழந்த மருத்துவமனை இயக்குனர் லியூ ஹிம்மிங்

    சீனா: நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த மருத்துவமனை இயக்குனர் கொரோனா வைரஸ் தாக்கி பலி

    சீனாவின் வுகான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த மருத்துவமனை இயக்குனர் வைரஸ் தாக்கி உயிரிழந்த சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பீஜிங்: 

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்லாக விளங்கிவருகிறது. 

    இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,868 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவியுள்ள வுகான் நகரில் உள்ள மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் என அனைத்து மருத்துவ ஊழியர்களும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். 

    இவர்களில் பலரும் தங்கள் குடும்ப உறவுகளை பிரிந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 

    உயிரிழந்த லியூ ஹிம்மிங் மற்றும் அவர் இயக்குனராக செயல்பட்டுவந்த மருத்துவமனை

    வைரஸ் தங்களுக்கும் பரவி விடக்கூடாது என்ற எண்ணத்தில் மருத்துவ ஊழியர்கள் தங்கள் முகங்களில் முகமுடிகளை அணிந்துகொண்டுதான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    ஆனாலும், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும், போதிய மருந்துகள், முகமூடி போன்ற உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தாலும் சில டாக்டர்கள், செவிலியர்கள் என பல மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளுக்கு தடுப்பு உபகரணங்களும் இல்லாமல் சிகிச்சை அளித்துவருகினறனர். 

    இதனால் நோயாளிகளிடமிருந்து மருத்துவ ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவருகிறது.

    இதற்கிடையில், கொரோனா குறித்து முதல் முதலில் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வுகான் நகரை சேர்ந்த டாக்டர் லி வென்லியங் உள்பட 6 மருத்துவ ஊழியர்கள் இதுவரை வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகரின் வுஷன்ங் பகுதியில் உள்ள மருத்துவமனையின் இயக்குனராக செயல்பட்டுவந்தவர் லியூ ஹிம்மிங். நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த இவருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. 

    இதையடுத்து அதே மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனாலும், லியூ ஹிம்மிங் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக சீன அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த டாக்டர் லி வென்லியங்கை தொடர்ந்து மருத்துவ இயக்குனர் லியூ ஹிம்மிங்கும் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சீன மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் வைரசை கட்டுப்படுத்த தவறிய அரசுக்கு எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளது.
    Next Story
    ×