search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெக்சிட் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்
    X
    பிரெக்சிட் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

    ஐரோப்பிய யூனியனில் இருந்து நீண்ட இழுபறிக்கு பின் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவுகளுக்கான சகாப்தம் தொடங்கியிருப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற பிரிட்டன் முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை. 

    ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற தீவிர முனைப்பு காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கும் அது சாத்தியமாகவில்லை. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாததால் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.

    அந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை தாக்கல் செய்து ஒப்புதலை பெற்றார். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது.

    இந்த நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன்னதாக மசோதா மீது உணர்ச்சிகரமான விவாதம் நடந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ஐரோப்பிய உறுப்பினர்கள் சிலர் கண் கலங்கியவாறு பேசினர்.

    அப்போது, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பிரிட்டனுக்கு பல்வேறு உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதே சமயம், பிரிட்டனின் எதிர்கால உறவுகள், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆகியவை குறித்து சில உறுப்பினர்கள் எச்சரித்தனர். அதனை தொடர்ந்து, ஓட்டெடுப்பு நடந்தது. 

    பிரெக்சிட் எதிர்ப்பாளர்கள்

    ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 உறுப்பினர்களும், எதிராக 49 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் 47 ஆண்டுகாலமாக உறுப்பு நாடாக இருந்த பிரிட்டன், நீண்ட இழுபறிக்கு பின் ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. 

    இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற வளாகத்தில் இருந்து பிரிட்டன் கொடிகள் இறக்கப்பட்டன. 

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவுகளுக்கான சகாப்தம் தொடங்கியிருப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் வெளியேறியதையடுத்து, பிரெக்சிட் ஆதரவாளர்கள் இதனை வரலாற்று வெற்றியாக கொண்டாடி வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு ஏற்படும் மாற்றங்கள்:-

    * பிரிட்டன் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழப்பார்கள்.

    * ஐரோப்பிய கூட்டமைப்பின் மாநாடுகளில் பிரிட்டன் பிரதமர் மற்றும் மந்திரிகள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

    * பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளை அமைப்பது குறித்து உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் பிரிட்டன் பேச ஆரம்பிக்க முடியும்.

    * பிரிட்டனின் பாஸ்போர்ட்டின் நிறம் மாற்றப்படும். 30 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நீல நிறத்துக்கு பிரிட்டன் பாஸ்போர்ட்டுகள் மாறும்.

    * ‘பிரெக்ஸிட்’ நினைவாக ‘ஜனவரி 31’ தேதியை தாங்கிய 50 பென்ஸ் நாணயங்கள் (½ பவுண்ட்) (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46) இன்று புழக்கத்துக்கு வரும்.

    Next Story
    ×