search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான் கான் மற்றும் ஜி ஜூங் பிங்
    X
    இம்ரான் கான் மற்றும் ஜி ஜூங் பிங்

    கொரோனா வைரஸ் பாதிப்பு - எங்கள் நாட்டு மாணவர்களை மீட்கமாட்டோம் : பாகிஸ்தான்

    சீனாவுடனான ஒற்றுமையை வெளிக்காட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை மீட்கமாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளது. 

    இந்த வைரஸ் பாதிப்பிற்கு அந்நாட்டில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். 7,711 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அதிக பாதிப்பு உள்ள வுகான் நகருக்கும் நாட்டின் பிற நகரங்களும் இடையேயான அனைத்து தொடர்புகளையும் சீன அரசு முற்றிலும் தடைசெய்துள்ளது. மேலும் அந்நகரை தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. 

    இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வுகான் நகரில் கல்வி பயிலும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்துசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

    அதன் ஒரு பகுதியாக அந்நகரில் தங்கியிருந்த 206 ஜப்பானியர்களை அந்நாட்டு அரசு தனி விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளது. 

    அதேபோல் இந்தியாவும் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்க தேவையான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக சீன அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது. 

    சீன அரசும் இந்தியர்கள் வுகான் நகரில் இருந்து பாதுகாப்பாக வெளியேற தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளது. 

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள 800 பாகிஸ்தான் மாணவர்களை திரும்ப அழைக்கமாட்டோம் என அந்நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளனர். 

    இது குறித்து பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா கூறியதாவது:-
       
    சீனாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். நாடு, உலகம் ஆகியவற்றின் நன்மை கருதியே வுகானில் இருந்து பாகிஸ்தானியர்களை மீட்காமல் உள்ளோம். இதைத்தான் உலக சுகாதார அமைப்பும் சொல்கிறது.  இதுதான் சீனாவின் கொள்கையாகவும் உள்ளது. இதுதான் பாகிஸ்தானின் கொள்கையும் ஆகும். 

    கோப்பு படம்

    சீனாவுடன் தோளோடுதோள்கொடுத்து எங்கள் ஒற்றுமையை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம். கொரோனா வைரசை சீன அரசு வுகான் நகரத்திற்குள்ளேயே கட்டுப்படுத்தியுள்ளது. 

    ஒருவேளை நாங்கள் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்டு எங்கள் நாட்டினரை வுகான் நகரில் இருந்து மீட்டு பாகிஸ்தான் அழைத்துவந்தால் அந்த வைரஸ் காட்டுத்தீ போல பல இடங்களுக்கும் பரவிவிடும். வைரஸ் பாதிக்கப்பட்ட 4 பாகிஸ்தானியர்கள் தற்போது குணமாகியுள்ளனர். 

    பாகிஸ்தான் அரசு அதன் மக்கள் சொந்த குடும்பத்தை போல அக்கரை காட்டுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் பரவும் தன்மை கொண்டுள்ளதால் தற்போது உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்கும் நேரமல்ல. 

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் போதுமான அளவில் உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    Next Story
    ×