search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    ‘வார்த்தைகளில் கவனம் தேவை’ -ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை

    உலக நாடுகளைப் பற்றி பேசும்போது மிகவும் கவனமாக பேச வேண்டும் என ஈரான் நாட்டின் மிக உயர் தலைவரான அலி காமேனிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வாஷிங்டன்:

    ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. இரு நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றத்தை தணிக்க வல்லரசு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. எண்ணெய் வளமுடைய வளைகுடா நாட்டு பகுதிகளில் ஏற்பட்ட பதற்றத்தினால் பல உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.  

    ஈரானின் முக்கிய தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை ஈரான் தாக்கியது. இதையடுத்து, இரு நாட்டு அதிபர்களும், முக்கிய தலைவர்களும் தங்களது நாட்டின் ராணுவ பலத்தை குறித்தும், தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை விடுத்து வந்தனர். 

    அலி காமேனி

    இந்நிலையில், உலக நாடுகளைப் பற்றி பேசும்போது மிகவும் கவனமாக பேச வேண்டும் என ஈரான் நாட்டின் உயர் தலைவரான அலி காமேனிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ‘ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி சமீப காலமாக அந்த மரியாதைக்கு உரியவராக இல்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறித்து சில மோசமான கருத்துகளை தெரிவித்துள்ளார். பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகளாக செயல்படுகின்றன என விமர்சித்திருக்கிறார். 

    ஈரானின் பொருளாதாரம் சிதைந்துள்ளது. அந்நாட்டு மக்கள் துன்பத்தில் உழல்கின்றனர். இந்த சமயத்தில் அவர் தனது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’ என டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×