search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவில் எரியும் காட்டுத்தீ
    X
    ஆஸ்திரேலியாவில் எரியும் காட்டுத்தீ

    ஆஸ்திரேலியாவில் திடீர் மழை - காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது

    ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில் திடீரென பெய்த மழையால் காட்டுத்தீயின் தாக்கம் குறைந்ததால், தீயணைப்பு வீரர்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.
    சிட்னி:

    ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.

    இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 100 கோடி விலங்குகள் பலியாகி இருக்கின்றன. 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகின. 1 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு சேதம் அடைந்தது. வெப்பத்தின் அளவும் அந்தப் பகுதிகளில் அதிகரித்து வந்தது. காற்று மாசும் பெருகியது.

    இந்த நிலையில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது. அந்த மழை நேற்றும் தொடர்ந்தது. இதனால் காட்டுத்தீயின் தாக்கம் குறைந்துள்ளது. இந்த திடீர் மழை, தீயணைப்பு வீரர்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.

    சூறாவளி காற்று, வெப்ப காற்றின் தரத்தை மாற்றி உள்ளது என விக்டோரியா சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை கூறியது. இந்த வார இறுதியில் மேலும் மழையை எதிர்பார்ப்பதாக அந்த முகமை தெரிவித்தது.

    நியூசவுத் வேல்ஸ் தீயணைப்பு படை இந்த திடீர் மழை பற்றி கருத்து கூறுகையில், “இது எங்கள் கிறிஸ்துமஸ், பிறந்த நாள், திருமண விழா கொண்டாட்டங்களுக்கு வழி வகுத்துள்ளது” என தெரிவித்தது.
    Next Story
    ×