search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிமெண்ட் இறக்குமதி (கோப்புப் படம்)
    X
    சிமெண்ட் இறக்குமதி (கோப்புப் படம்)

    வங்காளதேச சிமெண்டிற்கு இந்தியாவில் கடும் கிராக்கி - 9 ஆயிரம் மெட்ரிக் டன்கள் இறக்குமதி

    இந்திய மாநிலங்களான திரிபுரா, அசாம் மற்றும் மேகாலயா ஆகியவற்றிற்கு 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை 9,325 மெட்ரிக் டன் சிமெண்டை வங்காளதேசம் ஏற்றுமதி செய்துள்ளதாக தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    டாக்கா:

    உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன. ஒரு சில வல்லரசு நாடுகள் மட்டும், ஒரு சில பொருட்களை தவிர்த்து, தங்களுக்கு தேவையான பெரும்பாலான பொருட்களை தாங்களே தயாரித்துக் கொள்ளும் நிலையில் உள்ளன. 

    சீனா, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நாடுகளாக உள்ளன. உலக நாடுகளில், பொதுவாக கடல்வழி போக்குவரத்து மூலமாக ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், வங்காளதேச நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட், இந்தியாவில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. திரிபுரா, அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை 9,325 மெட்ரிக் டன் சிமெண்டை வங்காளதேசம் ஏற்றுமதி செய்துள்ளதாக தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து வங்காளதேச நாட்டின் பிரபல சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனர் கூறுகையில், ‘சிமெண்ட் இறக்குமதிக்கு, இந்தியா பெரிய சந்தையாக உள்ளது. வங்காளதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட், இந்தியா மட்டுமல்லாது மியான்மர், நேபாளம், மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது’என கூறினார்.

    வங்காளதேசம் ஏற்றுமதி ஊக்குவிப்பு பணியகத்தின் தகவலின்படி, 2018-19 நிதியாண்டில் 46.6 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ3,305 கோடி) மதிப்புள்ள சிமெண்ட் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2019-20 நிதியாண்டிலும் இந்தியாவுக்கான சிமெண்ட் ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வங்காளதேச சிமெண்ட் திரிபுரா மாநிலத்தில், தனி இடத்தை பெற்றுள்ளது என அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் தேப் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×