search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் அல் கூஸ் தொழில்பேட்டை பகுதியில் மழைநீரில் வாகனங்கள் தத்தளித்தபடி செல்வதை படத்தில் காணலாம்.
    X
    துபாய் அல் கூஸ் தொழில்பேட்டை பகுதியில் மழைநீரில் வாகனங்கள் தத்தளித்தபடி செல்வதை படத்தில் காணலாம்.

    கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் அமீரகம்

    வரலாறு காணாத கனமழையால் அமீரகம் வெள்ளத்தில் மிதக்கிறது. துபாயில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
    அபுதாபி :

    அபுதாபி, துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதால் முக்கியமான சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. சில வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி செல்கிறது.

    பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். சில பகுதிகளில் கடுங்குளிரும் சேர்த்து மக்களை வாட்டி வருகிறது.

    பலத்த காற்று காரணமாக அபுதாபி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. ராசல் கைமா பள்ளத்தாக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் போலீசார் மீட்டனர். அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேசிய பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனமழையால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு அமீரகத்தில் கனமழை பெய்துள்ளது. துபாயில் நேற்று மட்டும் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. சார்ஜா கோர்பக்கான் பகுதியில் கடந்த 3 நாட்களில் 184.8 மி.மீ. பதிவானது. கடந்த 1996-ம் ஆண்டு அல் அய்ன் பகுதியில் 144 மி.மீ மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×