search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ தளபதி சுலைமான்
    X
    ராணுவ தளபதி சுலைமான்

    சர்வதேச அரசியலை சிக்கலாக்கும் ஈரான் ராணுவ தளபதி கொலை

    ஈரானிய ராணுவ தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் ஈரானியர்கள் கலந்து கொண்ட காணொளிகள் உலகை அதிர்ச்சியடைய செய்ததோடு மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட, சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
    ஜெனரல் சுலைமானி கொலை இந்தியாவை, ஈரான், அமெரிக்க மோதல் பாதைக்கு நடுவே தள்ளியிருப்பதால், மிக சாமர்த்தியமாக அடுத்த நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்

    அமெரிக்கா நடத்திய டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் மூலம் பாக்தாத்தில் கொல்லப்பட்ட ஈரானிய ராணுவ தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் ஈரானியர்கள் கலந்து கொண்ட காணொளிகள் உலகை அதிர்ச்சியடைய செய்ததோடு மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட, சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே தினத்தில் ஈரானின் மூத்த மததலைவரான அயத்துல்லா அலி காமெனி, இதற்கு பழிக்கு பழி வாங்கப்படும் என்று சூளுரைத்திருக்கிறார்.

    இதை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானின் இஸ்லாமிய குடியரசு அமெரிக்க ஊழியர்கள் அல்லது சொத்துகளை தாக்கினால், ஈரானில் உள்ள கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்களை அமெரிக்கா தாக்கும் என்று எச்சரித்துள்ளார். இவை ஈரான் மற்றும் ஈரானிய கலாசாரத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மிக அபூர்வமான இடங்கள் என்று கூறியுள்ளார். கொல்லப்பட்ட ஈரானிய ராணுவத் தளபதி, டெல்லியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பானவர் என்றும் கூறியுள்ளார்.

    ஈரான், அமெரிக்காவிற்கு இடையேயான உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பங்களை, இந்தியாவின் நலன்களை சார்ந்து அலச வேண்டும். மத்திய கிழக்கு ஆசியாவின் புவிசார் அரசியல், அணு ஆயுதப் போர் உருவாகும் அபாயங்கள், இஸ்ரேல், இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் சமீப காலங்களில் பலம் பெற்று வரும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆராய வேண்டும்.

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைகளில், இந்தியாவிற்கு ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவு, இதர இஸ்லாமிய நாடுகளில் இருந்து பாகிஸ்தான் தனிமைப்படுதல், காஷ்மீர் பிரச்சினை, குடியுரிமை சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களுக்கு விரோதமானது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள், இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தம், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்டு வரும் ஏற்ற இறக்கங்கள், அதனால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கம், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் பணி புரியும் இந்தியர்களின் நலன்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள். அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் எதிர்நோக்கியுள்ள பதவி நீக்க விசாரணை மற்றும் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றின் பின்னணியில் இவற்றை அலச வேண்டும்.

    கடந்த 2-ந் தேதி உடனடியாக இந்தியா வெளியிட்ட அறிக்கையில், “ஒரு மூத்த ஈரானிய தலைவர் ஒருவர் அமெரிக்காவினால் கொல்லப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்கிறோம். மோதல் போக்கு அதிகரித்துள்ளது உலகை அச்சமடைய செய்துள்ளது. இந்த பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நிலவுவது இந்தியாவிற்கு மிக முக்கியமானது. நிலைமை மோசமடையாமல் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இந்தியா தொடர்ச்சியாக சுய கட்டுபாடுகளை முன்மொழிந்துள்ளது. இப்போதும் தொடர்ந்து முன்மொழிகிறது” என்று கூறியுள்ளது.

    கடந்த 5-ந் தேதி, இந்தியாவின் வெளியுறவுத் துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளரான மைக்பாம்பியோவுடன் தொலைபேசியில், அந்த பிராந்தியத்தில் ஈரானின் தொடர்ச்சியான தூண்டுதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை பற்றியும், இந்தியாவின் கவலைகள் மற்றும் சிக்கல்கள் பற்றியும் விவாதித்தார். அதே தினத்தன்று ஈரானிய வெளியுறவுத் துறை மந்திரி ஜாவத் ஜாரிபுடனும் மந்திரி பேசும் பொழுது, நிகழ்வுகள் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்தியா அதை பற்றி பெரும் கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தொடர்பில் இருக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார். ஓமன் நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி யூசுப் அலவியுடனும் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும், வளைகுடா பகுதியின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு பற்றி உள்ள பொதுவான நோக்கங்களைப் பற்றி விவாதித்தார்.

    காசிம் சுலைமானியின் இறுதி சடங்குகள் நடைபெற்ற தினமான கடந்த 7-ந் தேதி பங்குச் சந்தை குறியீடு எண் இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, ஏற்கனவே மந்தமாக உள்ள இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அயத்துல்லா அலி காமெனி ராணுவ தளபதி சுலைமானி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி

    உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    போர் அபாயம் அதிகரித்தால், பொருளாதார விஷயங்களில், இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று வாஷிங்டனில் உள்ள புரூக்கிங்க்ஸ் இன்ஸ்டியூசன் என்ற பொதுக் கொள்கைகளுக்கான லாப நோக்கமற்ற அமைப்பு கூறியுள்ளது. வளைகுடா பகுதியில் மட்டும் சுமார் 85 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இந்த பகுதியில் பெரிய அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வில் பெரும் பகுதி இங்கிருந்து தான் இறக்குமதி ஆகிறது. இந்த பகுதியில் இருந்து இந்தியாவிற்கு முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, இந்த பகுதி, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய பகுதிகளுக்கு செல்ல பாதையாக செயல்படும் என்று இந்தியா நம்புகிறது. இந்தியா உதவியுடன் மேம்படுத்தப்படும் ஈரானிய துறைமுகமான சாபார் இதற்கு ஒரு நுழைவு வாயிலாக இருக்கும். அமெரிக்க பொருளாதார தடைகளில் இருந்து இந்தியா இத்திட்டத்திற்கு விலக்கு பெற்றுள்ளது. சமீப காலங்களில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு அளிப்பதில் சுணக்கம் காட்டும் ஈரானை ஆதரிக்க இந்தியா விரும்பவில்லை.

    சன்னி குழுக்கள் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்கள் இந்திய எல்லைக்குள் விரிவடைவதை பற்றிய கவலை இந்தியாவிற்கு உள்ளது. 2012-ல் இஸ்ரேலிய தூதரக வாகனம் ஒன்றின் மீது, டெல்லியில், 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் வீட்டிற்கு மிக அருகே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இத்தகையது.

    இதை பற்றிய புலனாய்வுகளில், ஈரானை சேர்ந்த ஐ.எஸ்.ஆர்.ஜி.சி (இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) என்ற அமைப்பின் பங்கு கண்டறியப்பட்டது. சுலைமானி, ஐ.எஸ்.ஆர்.ஜி.சி அமைப்பில், பல வருடங்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    இந்த சிக்கலான சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் முயற்சி செய்யும் என்றாலும், அதை சமாளிக்க இந்தியா இன்று வலுவான நிலையில் உள்ளது. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பிற்கு, இப்போது காஷ்மீர் பிரச்சினை மீது விவாதம் நடத்துவதை விட, வேறு முக்கிய பிரச்சினைகளை பற்றிய கவலைகள் உள்ளன.

    மேற்கு ஆசியா பற்றிய ஈரானின் கொள்கை உருவாக்கத்தில் ஜெனரல் சுலைமானி முக்கிய பங்காற்றினார். அமெரிக்க படைகளுக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றினார். அந்த பிராந்தியம் முழுவதும், பினாமி ஆயுதப்படைகளின் வலைப்பின்னலை கொண்டு, ரகசிய நடவடிக்கைகளை, அவர் குவட்ஸ் என்ற உயர்ரக சிறப்பு படையின் தளபதி என்ற முறையில் முன்னெடுத்தார்.

    அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக நெருக்கமான கூட்டாளியான இஸ்ரேல், இப்போது, லெபனானில் இயங்கும் ஈரானின் பினாமி அமைப்பான ஹிஸ்பொல்லா என்ற அமைப்பின் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இஸ்ரேல் மீது குறிவைத்து, பல தரை தளத்தில் இருந்து தரை தளம் நோக்கி பாயும் ஏவுகணைகளை அது நிறுத்தியுள்ளது.

    ஈராக்கை விட்டு அமெரிக்காவை வெளியேற செய்யும், முக்கியமான ஈரானிய திட்டம், சுலைமானியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பணிகளில் ஒன்றாகும். ஆனால் அது இன்று எளிதான விஷயம் அல்ல. “அவர்கள் (ஈராக்) எங்களை வெளியேறத் தான் சொல்கின்றனர். நாங்கள் நட்பின் அடிப்படையில் அதை செய்ய முடியாவிட்டால், பிறகு அவர்கள் மீது, இதுவரை இல்லாத அளவில் பொருளாதார தடைகளை விதிப்போம். அதை ஒப்பிடுகையில், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் சாதாரணமானதாக தோன்றும்“ என்று டிரம்ப் ஈராக்கிற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அமெரிக்க படைகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று ஈராக்கிய நாடாளுமன்றம் சமீபத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப:

    NRD.thanthi@dt.co.in
    Next Story
    ×