search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷா மக்மூது குரேஷி
    X
    ஷா மக்மூது குரேஷி

    காஷ்மீர் விவகாரம்: ஐ.நா பாதுகாப்பு சபைக்கு 7-வது முறையாக பாகிஸ்தான் கடிதம்

    காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மக்மூது குரேஷி ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக சர்வதேச நாடுகளை நாடியது. ஆனால், சீனாவைத் தவிர பாகிஸ்தானுக்கு எந்த நாடும் சொல்லிக்கொள்ளும்படி இந்த  விஷயத்தில் ஆதரவு அளிக்கவில்லை.

    ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்ததாகவும் இதன்படி, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 2-வது முறையாக ரகசிய ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

    இந்நிலையில், காஷ்மீரில் மேலும் பதற்றங்களுக்கு சாத்தியம் இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மக்மூது குரேஷி கவலை தெரிவித்து கடந்த 12ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். 

    ‘காஷ்மீர் விவாகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்ப இந்தியா ரகசிய நடவடிக்கை தாக்குதலை நடத்தலாம். தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான எந்தவொரு அச்சுறுத்தலையும் தவிர்ப்பதுடன், காஷ்மீர் மக்களின் துன்பங்களுக்கு உடனடி முற்றுப்புள்ளி வைப்பதில் பாதுகாப்பு கவுன்சில் பங்களிக்க வேண்டும்’ என குரேஷி அவரது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 1,6,13 மற்றும் 26, செப்டம்பர் 16 மற்றும் அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் ஷா மக்மூது குரேஷி இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×