search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆங் சான் சூகி
    X
    ஆங் சான் சூகி

    மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபடவில்லை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி வாதம்

    மியான்மர் நாட்டில் சிறுபான்மையின மக்களை இனப்படுகொலை செய்யும் நோக்கத்தில் மியான்மர் அரசு செயல்பட்டதில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி இன்று வாதாடினார்.
    தி ஹாக்:

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு எதிரான இன அழிப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் கற்பழித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

    ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை சேர்ந்த தூதர்கள் கடந்த 4 நாட்களாக ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பாக வங்காளதேசம் நாட்டின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள மக்களை நேர்காணல் செய்தனர். மியான்மரில் உள்ள ரக்கினே மாநிலத்துக்கும் சென்று ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் நேரடியாக சந்தித்து குற்றச்சாட்டுகளையும், குறைகளையும் கேட்டறிந்தனர்.

    இதற்கிடையில், மியான்மரில் முஸ்லிம் மக்களை முற்றிலுமாக அழித்துவிடும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டதாக மேற்காப்பிரிக்கா கண்டத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான காம்பியா அரசின் சார்பில் நெதர்லாந்து நாட்டின் தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    மியான்மர் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த ‘ஜன்டா’ தலைமையிலான ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த 8-11-2016 அன்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

    ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ் மியான்மர் நாட்டின் அதிபராக பதவி ஏற்றார்.

    அரசின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூகி இருந்து வருகிறார். அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் இவரது அறிவுறுத்தலின்பேரில் தான் இயங்கி வருகின்றன என்னும் நிலையில் மியான்மர் அரசின் சார்பில் ஆங் சான் சூகி சர்வதேச நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி வாதாடினார்.

    முன்னதாக, நேற்று காம்பியா நாட்டின் சட்டத்துறை மந்திரி அபுபக்கர் டம்பாடோவ் தங்கள் நாட்டின் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஆஜராகி மியான்மர் அரசின் மீதும் ஆட்சியின் தலைவராக விளங்கும் ஆங் சான் சூகி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

    ரோஹிங்கியா கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்

    ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவத்தினர் ஏராளமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக அவர் பட்டியலிட்டார்.

    இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் இன்றும் தொடர்ந்த விசாரணையில் மியான்மர் அரசின் சார்பில் ஆங் சான் சூகி ஆஜராகி வாதாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா போராளிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் மட்டுமே மியான்மர் ராணுவம் ஈடுபட்ட நிலையில் ரக்கினே மாநிலத்தில் உள்ள நிலவரம் தொடர்பாக முழுமையற்றதும் தவறானதுமான சில தகவல்களை இந்த நீதிமன்றத்தில்  காம்பியா அரசு சமர்ப்பித்துள்ளது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.

    சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில் சில பகுதிகளில் ராணுவ வீரர்கள் அதிகப்படியான பலப்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை போதுமான முறையில் தெளிவாக கண்டுபிடிக்க அவர்கள் தவறி இருக்கலாம்.

    இதுதொடர்பாக மியான்மர் அரசு விசாரணை நடத்தி வருகிறது. எனவே, இந்த சூழலில் ராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை என்ற நோக்கம் இருந்ததாக மட்டுமே கருதிவிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் எதிராகவும் சர்வதேச நீதிமன்றத்தின் அருகே கடந்த இருநாட்களாக சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×