search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    உலகில் நடுத்தர மக்களின் வாழ்க்கை முடியப்போகிறது - இஸ்ரேல் பல்கலை. ஆய்வாளர் எச்சரிக்கை

    உலகில் நடுத்தர மக்களின் வாழ்க்கை வீழ்ச்சி அடையப் போவதாக இஸ்ரேல் பல்கலைக்கழக ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
    ஜெருசலேம்:

    கற்காலத்தில் ஆதிவாசியாக இருந்த மனிதன் தற்போது நாகரீக வளர்ச்சியில் உச்சத்தில் உள்ளான். தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரிக்கவே பூமியை விட்டு அடுத்த கிரகமான செவ்வாயில் வாழ்விடத்தை அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறான். இது ஒருபுறம் இருக்க மனிதனின் பயன்பாடுகளினால் இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

    பருவநிலை மாற்றம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகில் அனைத்து நாடுகளிலும் பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் இயற்கை வளங்களை பாதுகாக்க கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.நா சபை பருவநிலை மாற்ற மாநாடுகள் நடந்தாலும் இது குறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவாறு இல்லை.

    வேலைப்பளுவை குறைக்க மனிதன் கண்டு பிடித்த இயந்திரங்களினால் இன்று மனிதர்களுக்கே வேலை இல்லாமல் ஆகும் நிலை உள்ளன எனலாம்.

    ரோபோக்கள் பயன்பாடு உலகில் அதிகரித்து வருகிறது. முதலில் விண்வெளி ஆராய்ச்சி மையம் போன்ற ஒரு சில இடங்களிலே பயன்படுத்தப்பட்ட ரோபோ தற்போது அநேக தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா , ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் சில பணக்காரர்கள் வீட்டு வேலைகள் செய்வதற்கு சிறிய ரக ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு மிக சாதாரணமான பொருளாக ரோபோ மாறிவிட்டது.

    இந்நிலையில், ரோபோக்களின் பயன்பாடுகளால் நடுத்தர மக்களின் வாழ்க்கை முடியப் போகிறது என இஸ்ரேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எதிர்கால நிபுணர் ரோய் ட்ரெசானா தெரிவித்துள்ளார்.

    ‘ரோபோக்கள் மற்றும் இயந்திரங்களின் பயன்பாட்டால் நடுத்தர மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும். உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மை நிலைக்கு வருவார்கள் ஆனால் சில பேர் மட்டும் பணக்காரர்கள் ஆவார்கள். உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய வேலை வாய்ப்புகள் உருவானாலும், ரோபோக்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்பாடுகளினால் மனிதர்கள் வேலை வாய்ப்புகள் பறிபோவதை தடுக்க இயலாது. 

    சமீபத்தில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொழிற்சாலையில் வெறும் 10 சதவீத மனிதர்களே வேலைக்கு தேவைப்படுகின்றனர். காரணம் தானியங்கல் (ஆட்டோமேஷன்). 

    வளர்ந்து வரும் நாகரீக உலகில் புதிய வேலை வாய்ப்புகள் உருவானால் பழைய வேலைகள் அழிந்து விடுமா என்ற கேள்விகள் உள்ளன. ஆனால் பழைய வேலைகள் மறைந்து புதிய பணிகள் உருவாவதற்கான வேகம் மாறிக்கொண்டே இருக்கிறது, அது மிகப்பெரியது, 

    குழந்தையை பார்த்துக்கொள்ளுதல், உணவகங்களில் சர்வர் போன்ற தொழில்களில் ஈடுபடும் ஒருவரின் சம்பளம் வியத்தகு அளவில் குறையும். சில நேரங்களில் இது முந்தைய சம்பளத்தின் கால் பகுதி. இது ஒன்று அல்லது இரண்டு நபர்களின் பிரச்சினை அல்ல. இம்மாதிரியான இயந்திர பயன்பாட்டினால் நடுத்தர மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும்’ என ரோய் கூறினார்.
    Next Story
    ×