search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்

    அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - வடகொரியா திட்டவட்டம்

    அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
    பியாங்காங்:

    உலகின் இரு எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு மே மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.

    அப்போது வடகொரியாவை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே அணுஆயுத பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டு சொல்லும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதனால் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்ததால் இருநாடுகளுக்கு இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை முடங்கி போனது.

    இந்த சூழலில் யாரும் எதிர்பாரத வகையில் டிரம்ப், கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கு நேரில் சென்று கிம் ஜாங் அன்னை சந்தித்தார். அப்போது முடங்கிப்போன அணுஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டனர்.

    இதற்கிடையில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.

    இதனால் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை எச்சரிக்கும் வகையில் தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதித்தது.

    இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளால் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா கூறி வந்தது.

    ஆனால் வடகொரியாவோ, அமெரிக்கா தனது விரோதப்போக்கை மாற்றிக்கொள்ளும் வரை அணுஆயுத பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என கூறியது.

    மேலும் குறிப்பிடத்தக்க பொருளாதார தடைகளை நீக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவர அமெரிக்காவுக்கு வடகொரியா காலக்கெடு நிர்ணயித்தது.

    அமெரிக்கா அப்படி செய்யாவிட்டால் வடகொரியா புதிய பாதையை கடைபிடிக்கும் என அந்த நாடு பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமெரிக்கா மவுனம் காத்து வந்தது.

    இந்த நிலையில் அமெரிக்காவுடனான அணுஆயுத பேச்சுவார்த்தைக்கான கதவை மூடுவதாக வடகொரியா நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.

    ஐ.நா.வுக்கான வடகொரியா தூதர் கிம் ஜோங் இதுபற்றி கூறுகையில், ‘‘நாங்கள் இப்போது அமெரிக்காவுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை. ஏனெனில் வடகொரியா அணுஆயுதங்களை கைவிடவேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கனவே பேச்சுவார்த்தை அட்டவணையில் இருந்து வெளியேறிவிட்டது. எனவே அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை’’ என்றார்.

    ஆனாலும் இந்த விவகாரம் பற்றி பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்கா-வடகொரியா இடையே ஒரு உடன்பாடு எட்டப்படும் என தான் இன்னும் நம்புவதாக கூறினார்.அதேசமயம் வடகொரியா ஏதேனும் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நான் ஆச்சரியப்படுவேன் என்றும் வடகொரியா என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா மிக முக்கிய அணுஆயுதத்தை சோதித்து அதிரவைத்தது.

    வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள சோஹே செயற்கைகோள் ஏவுதளத்தில் இந்த மிக முக்கிய அணுஆயுதம் சோதிக்கப்பட்டதாக அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு அறிவியல் அகாடமியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    மேலும் சமீபத்திய சோதனையின் முடிவு வடகொரியாவின் போர்திறனுக்கான மாற்றத்தில் முக்கிய விளைவை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார். எனினும் எந்த மாதிரியான ஆயுதம் சோதிக்கப்பட்டது என்பது பற்றி அவர் தெளிவுபடுத்தவில்லை.எனினும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அல்லது ஏவுகணை செலுத்தும் திறனை அதிகப்படுத்துவதற்கான ராக்கெட் என்ஜின் சோதிக்கப்பட்டிருக்கலாம் என சர்வதேச நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×