search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகதிகள் படகு விபத்து
    X
    அகதிகள் படகு விபத்து

    ஆப்பிரிக்க நாட்டில் பரிதாபம் - படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி

    ஆப்பிரிக்க நாட்டில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணம் செய்த 58 அகதிகள் கடலில் மூழ்கி பலியானார்கள்.
    நவாக்சோட்:

    உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் சீர்குலைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இப்படி செல்கிறவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர். பாதுகாப்பற்ற மற்றும் அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்படும் படகு பயணங்கள் பெரும்பாலும் பெரிய விபத்தில் முடிந்து விடுகிறது.

    இந்தநிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருந்து கடந்த மாத இறுதியில் சுமார் 150 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஸ்பெயின் நோக்கி புறப்பட்டது. பல நாட்கள் இடைவிடாத பயணத்துக்கு பிறகு நேற்று முன்தினம் இந்த படகு மவுரித்தானியா நாட்டின் நுவாதிபவ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மவுரித்தானியா கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அதற்குள் 58 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 74 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேலும் 18 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×