search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஹாங்காங் மசோதாவில் டிரம்ப் கையெழுத்து

    ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்ட மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழலில் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்டம் 2019’ என்கிற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    ஹாங்காங்கில் மனித உரிமைகளை மீறுவோர் மீது பொருளாதார தடைகளை விதிக்கவும், ஹாங்காங் போலீசாருக்கு அமெரிக்க நிறுவனங்கள் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை தடுக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. இந்த மசோதா சட்டமானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில் சீனாவின் கடும் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்ட மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார். சீன அதிபர் ஜின்பிங் மீதுள்ள மதிப்பை கடந்து இந்த மசோதாவில் தான் கையெழுத்திட்டதாக கூறிய டிரம்ப், சீன தலைவர்களும் ஹாங்காங் ஜனநாயக பிரதிநிதிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்ட மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.
    Next Story
    ×