
இலங்கை அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிக அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் அவரால் எந்த அமைச்சகத்தையும் நிர்வகிக்க இயலாது.
அதிபர் தேர்தல் முடிவுக்கு பின்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தல் வரும் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 22-ம் தேதி 16 பேருடன் இடைக்கால மந்திரிசபையை கோத்தபய ராஜபக்சே அமைத்திருந்தார்.

கோத்தபய ராஜபக்சேவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சேவுக்கு வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டது. வெளியுறவுத்துறை மந்திரியாக தினேஷ் குணவர்தெனா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், 35 மந்திரிகள் 3 துணை மந்திரிகள் என மொத்தம் 38 உறுப்பினர்களுடன் இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட மந்திரிசபையில் தமிழர்கள், பெண்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. இன்றைய விரிவாக்கத்தில் சமல் ராஜபக்சேவுக்கு துணை ராணுவ மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னர் இருந்த இடைக்கால மந்திரிசபையில் இரு பெண்கள் மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவருக்கும் இடமளிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.