search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் ஹசன் ருஹானி
    X
    அதிபர் ஹசன் ருஹானி

    அமெரிக்காவின் சதி வெற்றிகரமாக முறியடிப்பு: அதிபர் ஹசன் ருஹானி

    ஈரான் போராட்டத்தின் பின்னணியில் இருந்த அமெரிக்காவின் சதி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அந்த நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்தார்.
    டெஹ்ரான் :

    ஈரானில் பெட்ரோல் மீதான மானியம் நீக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அரசு அறிவித்தது. இதனால் ஒரு மாதத்துக்கு 60 லிட்டருக்கு மேல் வாங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்குமான விலை 10 ஆயிரம் ரியால்களில் இருந்து 30 ஆயிரம் ரியால்களாக உயர்ந்துள்ளது.

    மானியம் நீக்கி விற்கப்படும் பெட்ரோலில் இருந்து வரும் வருமானம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசு அறிவித்தது. எனினும் பெட்ரோலின் விலை உயர்வை கண்டித்து, மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

    தலைநகர் டெஹ்ரான் உள்பட நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்கள் பெட்ரோல் கிடங்குகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை தீயிட்டு கொளுத்தினர்.

    இதற்கிடையே பெட்ரோல் விலை தொடர்பான அரசின் முடிவை நியாயப்படுத்தி உள்ள அந்நாட்டின் உச்ச அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா அலி காமேனி, வன்முறையாளர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்படி தலைநகர் டெஹ்ரான் உள்பட அனைத்து நகரங்களிலும் போராட்டம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. போராட்டக்காரர்களை விரட்டியடிக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதோடு, ஒரு சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

    மேலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அது மட்டும் இன்றி போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தில் 106 பேர் பலியானதாக இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘அம்னெஸ்டி’ நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.

    அந்த அறிக்கையில், போராட்டத்தில் ஈரான் பாதுகாப்பு படைகள் அதிகப்படியான சக்தியை போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்தியதாகவும், பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் போராட்டத்தின் பின்னணியில் இருந்து வன்முறையின் மூலம் ஈரானில் அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்த முயன்ற எதிரி நாடுகளின் சதியை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாக அந்த நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

    தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் ஹசன் ருஹானி இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது:-

    சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் வகுக்கப்பட்ட சதி திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு உள்ளது. ஈரானிய மக்கள் மீண்டும் ஒரு வரலாற்று சோதனையில் வெற்றி பெற்றுள்ளனர். நாட்டின் நிர்வாகிகள் குறித்து புகார்கள் இருந்தாலும் அந்த சூழ்நிலையை எதிரிகள் பயன்படுத்தி கொள்ள விடமாட்டோம் என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×