search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்ஸ் வான் வெய்சேக்கர்
    X
    பிரிட்ஸ் வான் வெய்சேக்கர்

    ஜெர்மனியில் முன்னாள் அதிபரின் மகன் குத்திக்கொலை

    ஜெர்மனியில் முன்னாள் அதிபரின் மகன் பிரிட்ஸ் வான் வெய்சேக்கர் மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
    பெர்லின்:

    ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ரிச்சர்ட் வான் வெய்சேக்கர். 1984-ம் ஆண்டில் மேற்கு ஜெர்மனியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், அதன் பிறகு ஒருங்கிணைந்த ஜெர்மனியின் முதல் அதிபராக ஆனார்.

    1994-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த ரிச்சர்ட் ஜெர்மனியின் மதிப்பு மிக்க அதிபராக திகழ்ந்தார். கடந்த 2015-ம் ஆண்டு அவர் வயது மூப்பு காரணமாக இறந்தார். ரிச்சர்டின் மகன் பிரிட்ஸ் வான் வெய்சேக்கர் (வயது 59). இவர் தலைநகர் பெர்லினில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கல்லீரல் நோய் குறித்து மருத்துவ மாணவர்களுக்கு பிரிட்ஸ் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

    அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென மேடையில் ஏறி பிரிட்சை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    தாக்குதல் நடத்திய நபரை கூட்டத்தில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 57 வயதான அந்த நபரை போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்சின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதே போல் ஜெர்மனியின் மூத்த அரசியல் தலைவர்களும், பிரிட்சுடன் பணிபுரிந்த டாக்டர்களும் அவரது கொலை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×