search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெனிஸ்
    X
    வெனிஸ்

    வீடு, தெருக்களில் கடல்நீர் புகுந்தது - வெள்ளத்தில் தவிக்கும் வெனிஸ் நகர மக்கள்

    இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெனிஸ் நகரத்தில் கடல்நீர் வீடு மற்றும் தெருக்களில் புகுந்ததால் அப்பகுதியில் வாழும் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
    வெனிஸ்:

    இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெனிஸ் நகரம் 100-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது.

    யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்றான இந்நகரம் சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. இந்நகரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. 80 சதவீத இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் நகரம் முழுவதும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.

    நகரின் பாரம்பரியமாக திகழும் தேவாலயங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள், கட்டிடங்கள் மற்றும் தெருக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நிவாரணப்பணிக்காக முதல்கட்டமாக ரூ.100 கோடி வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் கியூசெப்கோன்டே அறிவித்துள்ளார்.

    ஒரு வாரமாகியும் வெள்ள நீர் வடியாததால் நகரில் உள்ள பெரும்பாலான அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன. நகரில் வெள்ள சேதங்கள் வழக்கமானது என்றாலும், இம்முறை வரலாறு காணாத அளவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

    பருவநிலை மாற்றத்தால் இந்த அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு வெனிஸ் நகரத்தில் கடலலைகளின் பாதிப்பு தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு தேவையான தொழில் நுட்ப வசதிகள் இல்லை என சிலர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    வெனிஸ் நகர மேயர் லூய்கி ப்ருக்னாரோ கூறுகையில், ‘கடந்த 50 ஆண்டுகளில் இந்த வாரம்தான் அதிக அளவு கடல்நீர் நகருக்குள் புகுந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகப்பெரியது. இது நிரந்தர அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது’ என்றார்.

    வெனிஸ் நகரத்தில் தாழ்ந்த பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க செயின்ட் மார்க்ஸ் சதுக்கம் உள்ளிட்டவை வெள்ளத்தில் சிக்கி மிகவும் சேதமடைந்துள்ளன.

    நகரில் உள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்வதற்கு பல மில்லியன் கணக்கான யூரோக்கள் செலவிட வேண்டியது இருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×