search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தபய ராஜபக்சே
    X
    கோத்தபய ராஜபக்சே

    இலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே

    இலங்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

    கொழும்பு:

    இலங்கை அதிபராக மைத்திரி சிறிசேனா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் ஜனவரி 9-ந்தேதி முடிவடைகிறது.

    இதையொட்டி இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

    அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு போன்றவற்றால் நிலைகுலைந்து இருக்கும் நிலையில் அங்கு நடைபெற்ற இந்த தேர்தல் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

    இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    ஆனாலும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சகோதரரும், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சேவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரும், மறைந்த அதிபர் பிரேம தாசாவின் மகனுமான சஜித் பிரேமதாசாவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவியது.

    1982-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் பதவியில் உள்ள பிரதமர், அதிபர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் யாரும் போட்டியிடாத அதிபர் தேர்தல் இதுவாகும்.

    அதாவது அதிபர் பதவியில் இருந்து செல்லும் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே ஆகிய மூவரும் போட்டியிடவில்லை.

    இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 1.59 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 12,845 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதாவது 1 கோடியே 20 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இலங்கை அதிபர் தேர்தலை பொறுத்தவரை தாங்கள் விரும்பும் வேட்பாளராக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என 3 பேரை வாக்காளர்களால் தேர்வு செய்ய முடியும்.

    முதல் தேர்விலேயே 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்று விட்டால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். அத்தகைய பெரும்பான்மையை யாரும் பெறா விட்டால் வாக்காளர்களின் 2-வது தேர்வை அடிப்படையாக கொண்டு வெற்றி நிர்ணயிக்கப்படும்.

    நேற்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு இந்த முடிவு வெளியானது.

    தபால் ஓட்டில் பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 9 மாவட்டங்களில் வெற்றி பெற்றார். சஜித் பிரேமதாசா 3 மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றார்.

    தெற்கு பகுதியில் நடந்த தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் கோத்தபய முன்னிலை பெற்றார். தெற்கு பகுதியில் அவருக்கு 65 சதவீதமே கிடைத்தது. சஜித் பிரேமதாசாவுக்கு 28 சதவீதமே கிடைத்தது.

    அதை தொடர்ந்து நடந்த தேர்தல் முடிவில் மாற்றம் ஏற்பட்டது. சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றார். கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    சஜித் பிரேமதாசா

    தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாவட்டங்களில் சஜித் பிரேமதாசாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தது. இதனால் அவர் கோத்தபய ராஜபக்சேவை விட சுமார் 1 லட்சம் ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலை பெற்றார்.

    நேரம் செல்ல செல்ல பின்தங்கி இருந்த கோத்தபய ராஜபக்சே முன்னிலைக்கு வந்தார். சஜித் பிரேமதாசாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. சிங்களர்கள் வசிக்கும் பகுதியில் கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிகமான ஓட்டுகள் கிடைத்தது. அவர் மீண்டும் முன்னிலை பெற்றார்.

    கோத்தபய ராஜபக்சே 14 லட்சத்து 82 ஆயிரத்து 238 ஓட்டுகள் பெற்று இருந்தார். சஜித் பிரேமதாசாவுக்கு 13 லட்சத்து 97 ஆயிரத்து 239 வாக்குகள் கிடைத்தது. சுமார் 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றார்.

    தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசாவை பின்னுக்கு தள்ளி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.

    காலை 10.30 மணி நிலவரப்படி அவர் 3 லட்சத்து 14 ஆயிரத்து 533 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். கோத்தபய ராஜபக்சேவுக்கு 29 லட்சத்து 83 ஆயிரத்து 754 ஓட்டுகள் கிடைத்து இருந்தது.

    கோத்தபய ராஜபக்சேவுக்கு 49.48 சதவீத வாக்குகள் கிடைத்து இருக்கிறது. வெற்றி பெறுவதற்கு 50 சதவீதம் பெற வேண்டும். இலக்கை நெருங்கி விட்டதால் அவர் இலங்கையின் புதிய அதிபர் ஆவது உறுதியாகி விட்டது.

    சஜித் பிரேமதாசா 26 லட்சத்து 79 ஆயிரத்து 221 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவருக்கு 44.43 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.

    மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் அனுரா குமாரா திசநாயகே 1 லட்சத்து 67 ஆயிரத்து 822 ஓட்டுகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.

    இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழரான சிவலிங்கத்துக்கு 10,352 வாக்குகள் கிடைத்து 5-வது இடத்தில் உள்ளார்.

    Next Story
    ×