search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெனிஸ் நகரம்
    X
    வெனிஸ் நகரம்

    வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரம் - பேரிடர் பாதிப்பாக அறிவிப்பு

    தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ்நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி என மேயர் லூய்கி புருக்னேரோ அறிவித்துள்ளார்.
    வெனிஸ்:

    இத்தாலியின் வடமேற்கு பகுதியில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் வெனிஸ் நகரம் அமைந்துள்ளது.

    நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளால் ஆன இந்நகரம் புராதன சிறப்பு மிக்கது. ஒவ்வொரு சிறு தீவும் வாய்க்கால்களால் பிரிக்கப்படுகின்றது. நூற்றுக்கணக்கான பாலங்கள் இந்நகரின் ஒவ்வொரு பாகத்தையும் இணைக்கின்றன.

    இத்தகைய சிறப்பு களாலும், அழகிய கட்டிட சாலையாலும் சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது.

    இந்நகரில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு 6 அடி உயரத்துக்கு அலைகள் வீசின. நகரை நோக்கி வீசிய ஆளுயர அலைகளால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.

    இது 50 ஆண்டுகளுக்கு பிறகு நகரத்தை தாக்கிய 2-வது பெரிய வெள்ளமாகும். கடந்த 1966-ம் ஆண்டு 1.94 மீட்டர் உயரத்துக்கு அலைகள் வீசி இருந்தன.

    தொடர் மழையால் நகரின் வரலாற்று சிறப்பு மிக்க பிசிலிகா தேவாலயம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. நகரில் உள்ள சுற்றுலா தலங்கள், கட்டிடங்கள், தெருக்கள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    பேரலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நகரின் அவசர கால சேவைக்குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மீட்புக்காக கூடுதல் நீர்வழி ஆம்புலன்ஸ் படகுகள் பணியில் ஈடுபட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வெனிஸ்நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் லூய்கி புருக்னேரோ அறிவித்துள்ளார். மேலும், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    தற்போது அரசு கவனிக்க வேண்டும். இவையெல்லாம் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள். இதற்காக தரும் விலை அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    வெனிஸ் மட்டுமின்றி இத்தாலியில் டோரண்டா, பிரின் டிசி, மதேரா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மழைப்பொழிவால் நீரில் மூழ்கி உள்ளன. அங்குள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலியின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அங்குள்ள வீதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×