search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இவோ மோரல்ஸ்
    X
    இவோ மோரல்ஸ்

    பொலிவியா முன்னாள் அதிபருக்கு அரசியல் தஞ்சம் அளிப்பதாக மெக்சிகோ அறிவிப்பு

    பொலிவியா முன்னாள் அதிபர் இவோ மோரல்ஸ்-க்கு அரசியல் தஞ்சம் அளிக்க தயாராக உள்ளதாக மெக்சிகோ வெளியுறவுத்துறை மந்திரி மார்செலோ எப்ரார்ட் அறிவித்துள்ளார்.
    மெக்சிகோ சிட்டி:

    தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் கடந்த மாதம் 20ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபர் இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் அதிபரும் புரட்சிகர இடது முன்னிணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் மொத்தம் 88.31 சதவீத வாக்குகள் பதிவானது.

    அதிபர் இவோ மோரல்ஸ் 47.07 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 25ம்தேதிக்கு முன்தினமே தான் வெற்றி பெற்று விட்டதாக இவா மோரல்ஸ் அறிவித்திருந்தார்.

    இதனால் வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகளை விமர்சித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.  போராட்டக்காரர்களுடன் காவல்துறையினரும் வீதியில் இறங்கி போராட தொடங்கினர்.

    மார்கெல்லோ எப்ரார்ட்

    வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்வதேச தேர்தல் பார்வையாளர்களும் உறுதிப்படுத்தியதால் ராணுவ கிளர்ச்சியின் மூலம் பதவி மாற்றம் ஏற்படும் என்று கருதப்பட்டது. இதனால், ஜனநாயகத்தை பாதுகாத்து ராணுவ ஆட்சி ஏற்படாதிருக்க சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
     
    இப்படி தொடர் போராட்டங்கள் காரணமாக பொலிவியா நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவியதால் அதிபரை பதவியில் இருந்து விலகுமாறு ராணுவம் நிர்பந்தித்தது.

    வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய உதவியதாக தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் கைது செய்யப்பட்டனர். இவா மோரல்சும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அதிபர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார்.

    அவரை கைது செய்வதற்கான உத்தரவுடன் போலீசார் தேடி வருவதாக இன்று செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், அவருக்கு பொலிவியாவின் லா பாஸ் நகரில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அளிப்பதற்கு மெக்சிகோ அரசு சம்மதித்துள்ளது.

    ’இந்த முடிவு உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது அல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல்ரீதியான தஞ்சம் அளிக்கும் எங்கள் நாட்டின் வழக்கமான நடைமுறையாகவே இதை கருத வேண்டும்’ என மெக்சிகோ நாட்டி வெளியுறவுத்துறை மந்திரி மார்கெல்லோ எப்ரார்ட் குறிப்பிட்டுள்ளார்.
     
    Next Story
    ×