search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்-1 பி விசா
    X
    எச்-1 பி விசா

    அமெரிக்காவில் இந்திய ஐ.டி.நிறுவனங்களுக்கு ‘எச்-1 பி’ விசா மறுப்பு அதிகரிப்பு

    அமெரிக்காவில் இந்திய ஐ.டி.நிறுவனங்களுக்கு ‘எச்-1 பி’ விசா மறுக்கப்படுவது அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
    வாஷிங்டன்:

    • ‘எச்-1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். 
    • ‘அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே’ என்ற கொள்கையை  ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக கடைபிடித்து வருகிறார்.
    • கடந்த 2015-ம் ஆண்டு இந்த நிராகரிப்பு வெறும் 6 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது.

    இந்த ‘எச்-1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும்.இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

    ஆனால் இந்த விசா அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் கருதுகிறார். மேலும் ‘அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே’ என்ற கொள்கையை அவர் தீவிரமாக கடைபிடித்து வருகிறார்.இதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், பல்வேறு புதிய விதிமுறைகளையும் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

    இதனால், இப்போது ‘எச்-1 பி’ விசா பெறுவது மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது.

    இந்திய பாஸ்போர்ட்


    இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ‘எச்-1 பி’ விசாவை வழங்காமல், விண்ணப்ப அளவிலேயே நிராகரிக்கும் அளவு அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவையிடம் (யுஎஸ்சிஐஎஸ்) இருந்து பெற்ற புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அமெரிக்க கொள்கைகளுக்கான தேசிய அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்திருக்கிறது.

    அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ‘எச்-1 பி’ விசா பெறுவதற்காக இந்திய ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவோர் விண்ணப்பித்தால் அதை விண்ணப்ப அளவிலேயே நிராகரிப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

    கடந்த 2015-ம் ஆண்டு இந்த நிராகரிப்பு வெறும் 6 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றும் இந்தியர்களுக்குத்தான் விசா விண்ணப்ப அளவில் மறுப்பது அதிகரித்துள்ளது. ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் சார்பில் ஊழியர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு விசா மறுப்பு குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.

    குறிப்பாக விண்ணப்ப நிலையிலேயே அமேசான் நிறுவன ஊழியர்கள் ‘எச்-1 பி’ விசா நிராகரிப்பு அளவு ஒரு சதவீதம் முதல் 3 சதவீதமும், மைக்ரோசாப்ட் 2 சதவீதமும், இன்டெல் ஒரு சதவீதம் முதல் 3 சதவீதமும், ஆப்பிள் தொடர்ந்து 2 சதவீதமும் மட்டுமே இருந்து வருகிறது.

    கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ‘எச்-1 பி’ விசா விண்ணப்ப நிலையில் நிராகரிப்பு 10 சதவீதத்துக்கு மேல் தாண்டியதில்லை. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×