search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா குமாரதுங்கே
    X
    முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா குமாரதுங்கே

    ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு சந்திரிகா ஆதரவு

    இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பமாக ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா குமாரதுங்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதை தொடர்ந்து அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கை பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சஜித்பிரேமதாசா மற்றும் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனா நாயக், தமிழர் கட்சியை சேர்ந்த எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.

    இருந்தும் கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

    எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் இலங்கை பொது ஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தருவது என இலங்கை சுதந்திர கட்சி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    ஆனால் அதற்கு மாறாக முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா குமாரதுங்கே பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக நேற்று ஒப்பந்தம் செய்தார். இது இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சந்திரிகாவின் இத்தகைய நடவடிக்கைக்கு அவரது கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட சந்திரிகா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியின் ஆலோசகர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதற்கிடையே கோத்தபய ரரஜபக்சே தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்படும். சர்வதேச நாடுகளுடன் ஆன நல்லுறவு மேம்படுத்தப்படும். தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
    Next Story
    ×