search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான்கான்
    X
    இம்ரான்கான்

    இந்தியாவில் இருந்து கர்தார்பூர் புனித தலத்துக்கு வர கட்டணம் வேண்டாம் - இம்ரான்கான்

    இந்தியாவில் இருந்து கர்தார்பூர் புனித தலத்துக்கு வர பாஸ்போர்ட் மற்றும் கட்டணம் வேண்டாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    சீக்கியர்களின் மத குருவான குருநானக்கின் 550-வது பிறந்த தினம் வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    குருநானக் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் என்ற பகுதியாகும். அங்கு அவர் 18 ஆண்டுகள் தனது கடைசி காலத்தை கழித்தார்.

    கர்தார்பூரில் சீக்கியர்களின் மிக பிரமாண்டமான வழிபாட்டு தலம் உள்ளது. ஆண்டு தோறும் சீக்கியர்கள் அங்கு சென்று குருநானக்கை வழிபட்டு வருகிறார்கள்.

    அந்த வழிபாட்டு தலம் சர்வதேச எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குள் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்த வழிபாட்டு தலத்தையும், இந்தியாவையும் இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த சாலை திறப்பு விழா வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த சில தினங்களாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. அப்போது பாகிஸ்தான் பல நிபந்தனைகளை விதித்தது.

    கர்தார்பூருக்கு வரும் ஒவ்வொரு இந்தியருக்கும் 20 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் 10 தினங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், உரிய ஆவணங்கள் எடுத்து வர வேண்டும் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது. அந்த நிபந்தனைகளை விலக்க இந்தியா வலியுறுத்தி வந்தது.

    இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கர்தார்பூருக்கு வரும் சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் போதும். குருநானக்கின் பிறந்த நாளையொட்டி திறக்கப்படும் கர்தார்பூர் வழித்தடத்தில் வருபவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இம்ரான்கானின் அறிவிப்பு சீக்கியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 1,100 சீக்கியர்கள் விமானம் மூலம் பாகிஸ்தான் சென்று விட்டனர். அவர்கள் தங்களுடன் தங்க பல்லக்கு எடுத்து சென்றுள்ளனர்.

    அந்த தங்க பல்லக்கு குருநானக் வழிபாட்டு தலத்துக்கு வழங்கப்படுகிறது. அந்த வழிபாட்டு தலத்தை இந்தியாவுடன் இணைக்கும் சாலையை பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி குருதாஷ்பூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.

    அதே தினத்தன்று பாகிஸ்தானில் நடக்கும் விழாவில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டு அந்த வழித்தடத்தை அந்த பகுதியில் திறந்து வைக்கிறார். அந்த வழித்தடத்தில் தினமும் 5 ஆயிரம் சீக்கிய பக்தர்களை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×