search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவ்ஜாத் சிங் சித்து
    X
    நவ்ஜாத் சிங் சித்து

    கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா: முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு அழைப்பு

    கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    லாகூர்:

    சீக்கிய மதத்தின் நிறுவனரும், அந்த மதத்தின் முதல் குருவுமான குருநானக், தன் வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை, பஞ்சாப் மாநிலத்தையொட்டி பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக தர்பார் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

    சீக்கியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு சென்று தரிசிப்பது அவர்களின் புனித கடமைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விசா இல்லாமல், நேரடியாக கர்தார்பூருக்கு சீக்கியர்கள் சென்று தரிசிப்பதற்கு வழித்தடம் அமைத்து தருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளது. இதற்கு இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டது.

    அதன்படி பஞ்சாப்பில் தேராபாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இடையே (சர்வதேச எல்லையில் இருந்து) 4 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து கடந்த வாரம் கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டன. இதன்படி, சீக்கியர்கள் விசா இன்றி பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா சென்று வழிபட்டு வரலாம்.

    இந்த வழித்தடத்தை குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி, அடுத்த மாதம் 9-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார்.

    இந்நிலையில், இவ்விழாவிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய அரசியல்வாதியுமான நவ்ஜாத் சிங் சித்துவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவகல்கள் வெளியாகியுள்ளன. 

    56 வயதாகும் நவ்ஜாத்  சித்து 1983ம் ஆண்டு முதல் 1999 வரை இந்திய அணிக்காக 51 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  

    2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடந்த இந்திய பொது தேர்தல்களில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு 2017 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2017 பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். பஞ்சாப் மாநில பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் நவ்ஜாத் சித்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×