search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரிப் படம்
    X
    மாதிரிப் படம்

    டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை

    சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள் மூலம் தவறான தகவல்கள் பரவி வருவதை தடுக்கும் வகையில், உலக அளவில் அரசியல் விளம்பரங்களை தடை செய்ய டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
    வாஷிங்டன்:

    பேஸ்புக், டுவிட்டர் மிக முக்கியமான சமூக வலைத்தளங்கள் ஆகும். உலகில் கோடிக்கணக்கான மக்கள் இந்த வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலர் தவறான தகவல்கள் பரப்புவதற்கு வலைத்தளங்களை பயன்படுத்துவதால் பொது மக்களுக்கும் அரசுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க பல்வேறு நாடுகளில் சைபர் கிரைம் போலீசார் முயன்று வருகின்றனர்.

    இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் அரசியல் விளம்பரங்கள் பதிவிடுவதற்கு உலக அளவில் தடை விதிக்கப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டுவிட்டர் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி கூறியதாவது:-

    இயந்திர கற்றல் அடிப்படையிலான செய்திகளை பதிவு செய்தல் மற்றும் மைக்ரோ-இலக்கு நிர்ணயம், சரி பார்க்கப்படாத தவறான தகவல்கள் மற்றும் முற்றிலும் போலியான தகவல்கள் ஆகியவற்றினால் வரும் சிக்கல்களைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய கொள்கையின் விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும், அரசியல் விவகாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் பதிவிடும் அரசியல் விளம்பரங்கள் தடை செய்யப்படும்.

    முதலில் வேட்பாளர்களின் விளம்பரத்தை மட்டுமே தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் விளம்பரங்கள் காரணமாகவும் பிரச்சினைகள் எழக்கூடும் என்பதால் அவற்றையும் தடை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    அரசியல்வாதிகளின் தவறான தகவல்களுடன் கூடிய விளம்பரங்களை கண்காணித்து சரிபார்க்க வேண்டிய நெருக்கடியில் பேஸ்புக் உள்ள நிலையில், டுவிட்டர் நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×