search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

    கியூபா நாட்டுக்கு அமெரிக்க விமானங்கள் செல்ல தடை - டிரம்ப் நிர்வாகம் அதிரடி

    ஒபாமா ஆட்சிக்காலத்தில் பலப்படுத்தப்பட்ட நல்லுறவுகளை மோசமாக்கும் வகையில் அண்டைநாடான கியூபாவுக்கு அமெரிக்க விமானங்கள் செல்ல டிசம்பரில் தடை விதிக்கப்படவுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.

    இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவெடுத்து அதற்கான முயற்சிகளையும் செய்தார்.

    ரவுல் காஸ்ட்ரோ - ஒபாமா சந்தித்த காட்சி

    54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவுக்கு சென்று அந்நாட்டின் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ-வை சந்தித்தார்.

    இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் இருநாடுகளும் பழைய பகையை மறந்து, சற்று இணக்கமாக நடக்க தொடங்கின.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து கியூபாவுக்கு செல்லும் அமெரிக்க விமானங்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் தடை விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

    அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் கியூபாவுக்கு செல்வர்கள் மூலமாக கியூபா அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கருதுகின்றன.

    அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி சான்ட்டா கிளாரா, சாண்டியாகோ, ஹோல்குய்ன் உள்ளிட்ட கியூபா நாட்டில் உள்ள 9 முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானச் சேவைகளை நிறுத்த அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

    எனினும், கியூபா நாட்டின் ஹவானா நகரில் உள்ள ஜோஸ் மார்ட்டி சர்வதேச விமான நிலையத்துக்கு மட்டும் அமெரிக்க விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிரம்ப் அரசின் இந்த அதிரடி முடிவுக்கு கியூபா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க மக்களின் சுதந்திரத்தையும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளையும் பறிக்கும் இந்த நடவடிக்கையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடப்போவதில்லை என கியூபா வெளியுறவுத்துறை மந்திரி புருனோ ரோட்ரிகுவெஸ் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×