search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படம்
    X
    ரஷியா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படம்

    சிரியாவில் இருந்து அமெரிக்கா எண்ணெய் கடத்தியதா? செயற்கைக்கோள் படங்களை வெளியிட்ட ரஷியா

    அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சிரியாவில் இருந்து அதிக அளவிலான எண்ணெய் கடத்தப்பட்டுள்ளதாக கூறி, அதற்கான ஆதாரமாக செயற்கைகோள் படங்களை ரஷியா ராணுவம் வெளியிட்டுள்ளது.
    மாஸ்கோ: 

    சிரியாவில் உள்ள குர்து படைகள் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக போராடியதாக அமெரிக்கா அப்படைகளுக்கு ஆதரவு அளித்து வந்தது. 

    அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பின்னர் சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது துருக்கி மேற்கொண்ட போர் நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் உள்பட 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    துருக்கியின் செயலை கண்டித்து அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளதார தடைகளை விதித்தது. ஆனால் துருக்கி தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்தது. 

    இதையடுத்து அமெரிக்கா மற்றும் துருக்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், துருக்கி அரசு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. குர்து போராளிகளும் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறுவதாக ஒப்புக்கொண்டனர்.

    சிரியா விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினும், துருக்கி அதிபர் எர்டோகனும் 4 தினங்களுக்கு முன்பு சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தினர். பாதுகாப்பு வளையத்தில் இருந்து மொத்த குர்து படைகளையும் வெளியேற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது என தகவல்கள் வெளியாகின. சிரியா விவகாரத்தில் துருக்கி ரஷ்யாவின் உதவியை நாடியது. அதன்பின்னர், ரத்தக்கறை படிந்த சிரிய மண்ணில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்பும் அறிவித்தார்.

    இதையடுத்து சிரியா துருக்கி எல்லையில் உள்ள குர்து பகுதிகள் ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. அப்பகுதியில் ரஷிய ராணுவ போலீசார் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில் அமெரிக்கப்படைகள் சிரியாவில் காலூன்றி இருந்த நேரத்தில், அதாவது சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னும் பின்னும், அமெரிக்க வீரர்களின் பாதுகாப்புடன் சிரியாவில் இருந்து அதிக அளவிலான எண்ணெய் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் ரஷியா பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், ‘ரஷிய ராணுவம் வெளியிட்டுள்ள புலனாய்வு செயற்கைக்கோள் படங்கள் அமெரிக்கா எண்ணெய் கடத்தியதை நிரூபிக்கின்றன’ என தெரிவித்தார்.

    சிரியாவில் எண்ணெய் வயல்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை தடுப்பதற்கு, அப்பகுதியில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது, என அமெரிக்கா ராணுவ மையமான பென்டகன் தலைவர் மார்க் எஸ்பர் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×