search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாமிடிர் புதின்
    X
    விளாமிடிர் புதின்

    சிரியா உள்நாட்டுப்போர்: அமெரிக்காவின் தோல்வியும் ரஷியாவின் வெற்றியும்....

    குர்துக்கள் பகுதியில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியதையடுத்து அங்கு ரஷியா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக நிலவி வந்த உள்நாட்டு குழப்பம் முடிவுக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சிரியாவில் 2011-ம் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அல் அசாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கினர். இதனால் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் போர் மூண்டது.

    அப்போது சிரியாவில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாகவும் அதை தடுத்து நிறுத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வரப்போவதாகவும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்தார்.

    இதையடுத்து அங்குள்ள போராளிகள் குழுக்களுக்கு ஆயுதம் உள்பட பல உதவிகளை செய்த அமெரிக்கா சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிவகுத்தது. 

    அந்த கிளர்ச்சியாளர்களில் ஒரு தரப்பினர்தான் குர்திஷ்தான் என தனிநாடு கேட்டு போராடிய குர்துக்கள். அவர்கள் சிரியாவின் வடக்கு பகுதியில் பல நகரங்களை உள்ளடக்கிய தன்னாட்சி அமைப்பை ஏற்படுத்தி ஆட்சி நடத்தி வந்தனர்.

    குர்துக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. சிரியாவில் அமெரிக்காவின் தலையிடை விரும்பாத அந்நாட்டு அதிபர் பஷார் தனது நட்புகரமும், அமெரிக்காவின் பரம எதிரியுமான ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உதவியை நாடியது.

    புதின் மற்றும் ஒபாமா

    இதனால் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி வல்லரசு நாடுகளான ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே எழுந்தது. இதற்கிடையில், ஈராக்கில் உருவாகிய ஐ.எஸ் அமைப்பு உள்நாட்டுப்போர் காரணமாக சிரியாவில் 2012-ம் ஆண்டுவாக்கில் தலைதூக்கத் தொடங்கியது.

    உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவிற்கு சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்த குர்திஷ் படைகள் பெரும் உதவி செய்தது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளை கைதிகளாக சிறைகளில் அடைத்து அவர்களை கண்காணித்தும் வந்தனர்.

    குர்திஷ்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி துருக்கி எல்லையோரம் அமைந்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத குழுக்கள் மற்றும் உள்நாட்டுப்போர் உள்பட பல இன்னல்களால் சிரியாவை விட்டு வெளியேறிய மக்கள் அருகாமையில் உள்ள துருக்கியில் பல ஆண்டுகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையில், குர்திஷ் போராளிகள் குழு தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்துவதாகவும் அவர்கள் ஒரு பயங்கரவாதக்குழு எனவும் துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருந்தார். 

    ஆனால், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்துக்களுக்கு அமெரிக்க படைகள் ஆதரவு அளித்து வந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் துருக்கி காத்திருந்தது. ஏனென்றால் துருக்கி நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடு. மேலும்  அது அமெரிக்காவின் நட்பு நாடு. 

    டொனால்டு டிரம்ப்

    இந்நிலையில்தான், தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் சிரியாவில் உள்ள தனது படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

    இந்த சந்தர்ப்பத்தைதான் எதிர்நோக்கியிருந்தது துருக்கி. சந்தர்ப்பம் கிடைத்ததும்  சிரியாவின் வடக்குப்பகுதியில் இருந்த குர்திஷ் போராளிகளை விடட்டியடித்துவிட்டு தங்கள் எல்லைப்பகுதியில் இருந்து சிரிய எல்லைக்குள் சுமார் 30 கி.மீ தூரத்திற்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி அதில் அகதிகளை குடியமர்த்த துருக்கி அதிபர் எர்டோகன் திட்டம் தீட்டினார்.

    இதற்காக ‘அமைதி வசந்தம்’ என்ற பெயரில் தனது படைகளை சிரியாவின் எல்லைக்குள் அனுப்பி அங்கு தன்னாட்சி செய்துகொண்டிருந்த குர்திஷ்கள் மீது கடந்த 9-ம் தேதி முதல் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தினார்.  

    அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி துருக்கி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் குர்திஷ் போராளிகள் உள்பட 600-க்கும் அதிகாமானோர் கொல்லப்பட்டனர்.
      
    இதற்கிடையில், சிரிய அரசுப்படைகளுக்கும் குர்திஷ் போராளிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டு துருக்கியின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. 

    இதையடுத்து, பல ஆண்டுகளாக குர்திஷ்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் முதல்முறையாக சிரிய அதிபர் பஷால் அல் அசாத்தின் படைகள் நுழைந்துள்ளன.

    எர்டோகன் மற்றும் புதின்

    இந்நிலையில், சிரிய விவகாரம் குறித்து ரஷிய அதிபர் புதினை துருக்கி அதிபர் ஏர்டோகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சிரிய அதிபர் அசாத்தின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்பட்ட ரஷிய அதிபர் புதின் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தீர்க்க முன்வந்தார்.

    இதையடுத்து, சிரிய எல்லைக்குள் துருக்கி இதுவரை கைப்பற்றியுள்ள 30 கீ.மீட்டர்கள் தொலைவை பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த புதின் அனுமதி அளித்துள்ளார். மேலும், அங்குள்ள குர்திஷ் போராளிகள் உடனடியாக வெளியேறவும் கெடு விதித்தார்.

    இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஷிய படைகள் சிரிய அரசுப்படைகளுடன் இணைந்து எல்லைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட துருக்கி அதிபர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

     இந்த முடிவுகளால் வடக்கு சிரியாவின் சில பகுதிகள் துருக்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. மேலும், பல ஆண்டுகளாக குர்திஷ்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகள் சிரிய அதிபர் பஷால் அல் அசாத்தின் ஆளுமையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

    இதனால் சிரியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் முற்றிலும் தடைபட்டு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்கிவந்த துருக்கி ரஷியாவின் பக்கம் சாய்ந்துள்ளது. இதனால் சிரிய விவகாரத்தில் அமெரிக்கா தோல்வி அடைந்துள்ளதாகவும் ரஷியா வெற்றி பெற்றுள்ளதாகவும் உலக அரங்கில் கருத்து நிலவுகிறது.

    Next Story
    ×