search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங் போராட்டக்காரர்கள்
    X
    ஹாங்காங் போராட்டக்காரர்கள்

    ஹாங்காங்: போராட்டத்திற்கு காரணமான சட்ட மசோதா முற்றிலும் ரத்து

    ஹாங்காங்கில் மோதல்களை உண்டாகக் காரணமான சட்ட மசோதாவை முற்றிலும் திரும்பப் பெறுவதாக அந்நகரின் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. 

    இந்த சட்ட திருத்தத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லோம் தெரிவித்தார். 

    ஆனாலும், ஹாங்காங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய போலீசார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளுடன் ஐந்து மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. 

    ஹாங்காங் வீதிகளில் குடைகளை பிடித்தபடி லட்சக்கணக்கில் திரளும் போராட்டக்காரர்கள் தங்கள் அடையாளங்களை போலீசார் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக முகங்களில் முகமூடி அணிந்துகொண்டு போராடி வருகின்றனர். 

    போராட்டத்தின் போது அந்நகரில் உள்ள சீன ஆதரவு நிறுவனங்களை அடித்து நொறுக்கும் போராட்டக்காரர்கள் மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் துவம்சம் செய்துவருகின்றனர்.

    போராட்டக்காரர்களை ஒடுக்க ஹாங்காங் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகள், தண்ணீரை பாய்ச்சி விரட்டுதல், தடியடி என பல தாக்குதல்களை நடத்தினர். 

    ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

    ஹாங்காங் தனது பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்கு வகிப்பதால் அதை சீர்குலைக்க விரும்பாத சீனா தனது ராணுவத்தை அங்கு அனுப்பி மக்களை எச்சரிக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுவந்தது.

    ஹாங்காங் போராட்டம் மற்றும் நகர பாதுகாப்பு செயலாளர் ஜான் லீ

    இந்நிலையில், ஹாங்காங்கில் செய்தியாளர்களை சந்தித்த அந்நகரின் பாதுகாப்பு செயலாளர் ஜான் லீ, 'ஹாங்காங்கில் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த ஏதுவாக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்த மசோதாவால் சமூகத்தில் மோதல்கள் நிலவிவருகிறது. ஆகையால் நான் அந்த சட்டத்தை  அதிகாரப்பூர்வமாக முற்றிலும் திரும்பப்பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

    ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்க ஏதுவாக கொண்டுவரப்பட்ட சட்டத்தை ரத்து செய்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜான் லீ தெரிவித்துள்ள் போதிலும், நகரின் தலைமை நிர்வாகி கேர் லோமின் நிலைப்பாடு என்ன? என்று சந்தேகம் எழுந்துள்ளதால்   போராட்டங்கள் இன்னும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×