search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி நடவடிக்கை அதிரடிக் குழு கூட்டம்
    X
    நிதி நடவடிக்கை அதிரடிக் குழு கூட்டம்

    பயங்கரவாதத்துக்கு நிதியுதவி - பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பகம் இறுதிக்கெடு

    பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்களுக்கு செல்லும் நிதியுதவிகளை தடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை அதிரடிக் குழு இறுதிக்கெடு விதித்துள்ளது.
    பாரிஸ்:

    சர்வதேச அளவில் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பயங்கரவாதத்துக்கு வரும் நிதியுதவி உள்ளிட்ட சர்வதேச அளவிலான நிதி சார்ந்த பிரச்சினைகளை களைவதற்காக நிதி நடவடிக்கை அதிரடிக் குழு (எப்.ஏ.டி.எப்) என்ற சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 206 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
     
    இந்த குழுவின் வருடாந்திர கூட்டம் இந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள பாரிஸ் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியதால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, ஈரான், வடகொரியா வரிசையில் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கு பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது.

    மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியை தடுப்பது தொடர்பாக சர்வதேச நிதி கண்காணிப்பகம் ஒரு செயல் திட்டத்தை பாகிஸ்தானுக்கு பரிந்துரைத்திருந்தது.

    இந்தியா மீது பயங்கரவாத தாக்குதலை கட்டவிழ்த்து விடும் லஷ்கர்-இ-தொய்பா, ஜைஷ்-இ-ஹிந்த் உள்ளிட்ட 27 அமைப்புகளின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு ஓராண்டு கெடு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான எப்.ஏ.டி.எப். வருடாந்திர கூட்டம் தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற வருகிறது.

     நிதி நடவடிக்கை அதிரடிக் குழு தலைவர், செயலாளர்

    பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட கெடுக்காலம் ஓராண்டு முடிந்த பிறகும் பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதியுதவிகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    27 அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுட்டிக்காட்டியதில் வெறும் 5 அமைப்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ள பாகிஸ்தான் அரசு பயங்கரவாத இயக்கங்களுக்கான நிதியுதவி சென்று சேருவதை உரிய முறையில் தடுக்க தவறி விட்டது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட 40 அம்சங்களில் 10 அமசங்களை கூட பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை.

    2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இவ்விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டின் கூட்டத்தின்போது பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான முன்னேற்பாடாக பாகிஸ்தானுடனான நிதி மற்றும் வர்த்தகம் தொடர்பான விவகாரங்களை இதர நாடுகள் விழிப்பாக கையாள வேண்டும் எனவும் எப்.ஏ.டி.எப். கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
    Next Story
    ×