search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்கும் மாணவிகள்
    X
    சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்கும் மாணவிகள்

    மோடி - ஜின்பிங் சந்திப்பு, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் - சீன பத்திரிகைகள் கணிப்பு

    மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் இடையே நடைபெறும் சந்திப்பு இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.
    பெய்ஜிங்:

    பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) மாமல்லபுரத்தில் நடைபெறும் சந்திப்பு, இரு நாடுகளிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் இந்த சந்திப்பு குறித்த தகவல்களே அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

    சீனாவின் முக்கிய ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் மோடி-ஜின்பிங் சந்திப்பு குறித்த தகவல்களும், கட்டுரைகளும் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன. அந்தவகையில் சீனாவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான ‘சீனா டெய்லி’ பத்திரிகையில் வெளியாகி உள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்தியாவும் சீனாவும் முக்கியமான அண்டை நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்து வரும் நாடுகளுமாகும். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே கடந்த ஆண்டு வூகன் நகரில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் இரு நாடுகளும் ஒத்துழைப்பை சீராக முன்னெடுத்து வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய பிரச்சினைகளுக்கும் முறையாக தீர்வு காணப்பட்டு வருகின்றன என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பானது பொதுவாக இரு நாட்டு தலைவர்களுக்கும் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் சுதந்திரமாக கலந்துரையாடுவதற்கான சூழலை அமைத்து தரும். கடந்த ஆண்டு மத்திய சீனாவின் வூகன் பகுதியில் உள்ள ஹூபை மாகாணத்தில் நடந்த சந்திப்பு இரு தரப்பு உறவுகள், உலகளாவிய நிலைமைகள் குறித்து பேச ஓர் வாய்ப்பை வழங்கியது.

    அதைப்போல தென்னிந்தியாவின் சென்னையில் (மாமல்லபுரம்) நடைபெற உள்ள மோடி-ஜின்பிங் சந்திப்பும் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தும். குறிப்பாக, இரு தரப்பு உறவுகள் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவும்.

    இரு நாட்டிற்கும் இடையே எல்லை பிரச்சினை உள்ளிட்ட தொன்று தொட்ட பிரச்சினைகள் இருந்தாலும், வூகன் சந்திப்பு இரு நாட்டு உறவுகளை திறப்பதற்கான புதிய தொடக்க புள்ளியாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் நடைபெற உள்ள மோடி-ஜின்பிங் சந்திப்பு இரு தரப்பு உறவை நிச்சயமாக வலுப்படுத்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதைப்போல மற்றொரு முன்னணி பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில், மோடி-ஜின்பிங் சந்திப்பு இரு தரப்பு உறவுகளையும், நம்பிக்கையையும் மேம்படுத்தும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு இந்த சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் சீன ஊடகங்கள், இந்த நிகழ்வு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக ஏராளமான செய்தியாளர்களை மாமல்லபுரத்துக்கு அனுப்பி வைத்துள்ளன.
    Next Story
    ×