search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருவியில் இருந்து விழுந்து பலியான யானைகள்
    X
    அருவியில் இருந்து விழுந்து பலியான யானைகள்

    தாய்லாந்தில் மீண்டும் பரிதாபம் - அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலி

    தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலியாகின.
    பாங்காக்:

    தாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. இது யானைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாயகமாக விளங்குகிறது.

    இங்கு 300-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. மேலும் இந்த பூங்கா புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காரில் சென்று, வனவிலங்குகளை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்குள் ராட்சத அருவி ஒன்று உள்ளது. இது நரகத்தின் வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த சனிக்கிழமை காலை யானை கூட்டம் அருவியின் உச்சியில் உலாவி கொண்டிருந்தது. அப்போது 3 வயதான குட்டியானை ஒன்று அருவியில் இருந்து தவறி விழுந்தது.

    இதையடுத்து, குட்டியானையை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து 5 யானைகள் அருவியில் இருந்து விழுந்தன. இதில் குட்டியானை உள்பட 6 யானைகளும் பாறைகளில் மோதி இறந்தன.

    மேலும் அருவிக்கு அருகே தவித்துக்கொண்டிருந்த 2 யானைகளை பூங்கா ஊழியர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இந்த சுவடு மறைவதற்குள் மீண்டும் 5 யானைகள் அதே அருவியில் இருந்து விழுந்து பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பூங்கா ஊழியர்கள், கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானத்தின் மூலம் அருவியை ஆய்வு செய்தனர். அப்போது, அருவியின் கீழே 5 யானைகள் செத்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த 5 யானைகளும், எப்போது? எப்படி? அருவியில் இருந்து விழுந்தது என்பது தெரியவில்லை.

    யானையின் உடல்கள் தண்ணீரை மாசுபடுத்தக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் உடல்களை உடனடியாக அகற்றும் தீவிர முயற்சியில் தேசிய பூங்கா அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    காவோ யாய் தேசிய பூங்காவில் மிக குறுகிய காலத்தில் 11 யானைகள் உயிரிழந்தது இதுவே முதன் முறை என கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த 1992-ம் ஆண்டு இதே அருவியில் இருந்து ஒரே நேரத்தில் 8 யானைகள் விழுந்து பலியானது நினைவுகூரத்தக்கது.
    Next Story
    ×