search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பர்வேஸ் முஷரப்
    X
    பர்வேஸ் முஷரப்

    பாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்த விவகாரம் காஷ்மீர் - முஷரப் கொக்கரிப்பு

    காஷ்மீரும் அங்குள்ள மக்களும் பாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்துப்போன விவகாரம் என்பதால் இறுதிச் சொட்டு ரத்தம் உள்ளவரை நாங்கள் போராடுவோம் என பாகிஸ்தான் முன்னள் அதிபர் முஷரப் குறிப்பிட்டுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பல்வேறு வழக்குகளில் சிக்கி துபாயில் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரும் முன்னாள் ராணுவ தளபதியுமான பர்வேஸ் மு‌ஷரப்(76) விரைவில் பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

    இந்நிலையில், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான முஷரப் அக்கட்சியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு துபாயில் இருந்தவாறு தொலைபேசி வழியாக தனது கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார்.

    பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுத வலிமை பெற்ற அண்டைநாடுகளாக இருந்துவரும் நிலையில் இந்திய அரசியல்வாதிகளும் அங்குள்ள ராணுவ தளபதிகளும் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் முஷரப் குற்றம்சாட்டினார்.

    ராணுவ தளபதியாக முஷரப்

    இந்தியாவுடன் இணக்கமாக போக விரும்பும் பாகிஸ்தானை இந்திய அரசு புறக்கணிப்பதுடன் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் குற்றம்சாட்டிய முஷரப், கார்கில் போரை பற்றியும் தனது உரையின்போது குறிப்பிட்டார்.

    1999-ம் ஆண்டில் நடந்த கார்கில் போரை நிறுத்துவதற்காக இந்தியா அமெரிக்காவின் உதவியை நாடியதை இந்திய ராணுவம் இப்போது மறந்திருக்கலாம் எனவும் அவர் கேலியாக கூறினார்.

    அமைதி நிலவ வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பத்தை பலவீனமாக கருதிவிடக் கூடாது. இந்தியாவின் தவறான சாகசங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கு பாகிஸ்தான் படைகள் தயாராக இருக்கின்றன.என்ன ஆனாலும் சரி, காஷ்மீரில் உள்ள சகோதரர்களுக்கு தொடர்ந்து நாங்கள் துணையாக இருப்போம்.

    காஷ்மீரும் அங்குள்ள மக்களும் பாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்துப்போன விவகாரம் என்பதால் இறுதிச் சொட்டு ரத்தம் உள்ளவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் இதற்காக போராடுவார்கள் எனவும் முஷரப் கூறியுள்ளார்.
    Next Story
    ×