search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய போலீஸ் அதிகாரி (உள்படம்)
    X
    சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய போலீஸ் அதிகாரி (உள்படம்)

    அமெரிக்காவில் பணியில் இருந்த சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய போலீஸ் அதிகாரி ஒருவர் பணியில் இருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஹூஸ்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது ஹூஸ்டன் நகரம். இங்குள்ள ஹாரிஸ் கவுண்டியின் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் சந்தீப் சிங் தலிவால். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சீக்கியர் ஆவார். இவர் நேற்று மதியம் பணியில் ஈடுபட்டிருந்தபோது மர்மநபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், “ஹூஸ்டன் நகரில் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்த போது, சந்தீப் சிங் தலிவால், கார் ஒன்றை நிறுத்தி விசாரித்தார். அது காவல்துறையினர் மேற்கொள்ளும் சாதாரணமான விசாரணைதான். விசாரித்த பின்னர் தனது ரோந்து வாகனத்திற்கு சந்தீப் சிங் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் இருந்து வெளியே வந்த அந்த நபர் சந்தீப் சிங்கை பின்புறம் இருந்து சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தலையில் குண்டு பாய்ந்த காரணத்தால் அவர் உயிரிழந்தார். 

    குற்றவாளியின் காரில் உள்ள டேஷ் கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளி பிடிபட்டுள்ளார். விசாரணையில் அவர் பெயர் ராபர்ட் சோலிஸ் எனவும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது” என்றனர்.

    இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சீக்கியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×