search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவில் இலவச வீட்டுக்காக 23 முறை திருமணம்
    X
    சீனாவில் இலவச வீட்டுக்காக 23 முறை திருமணம்

    சீனாவில் இலவச வீட்டுக்காக 23 முறை திருமணம்

    சீனாவில் அரசின் இலவச வீட்டை பெறுவதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் 23 முறை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் ஷெஜியாங் மாகாணம் லி‌ஷூய் நகரில் உள்ள ஒரு கிராமத்தில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அந்நாட்டு அரசு மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருகிறது.

    அதாவது, தற்போது அந்த மக்கள் இருக்கும் இடத்தை அரசு எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக அதே கிராமத்தில் வேறொரு இடத்தில் 430 சதுர அடி அளவிலான வீடுகளை இலவசமாக வழங்கி வருகிறது.

    இந்த திட்டத்தின் படி கிராமத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தாலும், இல்லையென்றாலும் அரசு தரும் இலவச வீடுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதாவது, அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருமே இலவச வீடு பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் அரசின் இந்த திட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு லி‌ஷூய் நகரை சேர்ந்த பான் என்பவரின் குடும்பத்தினர் தங்கள் உறவினர்களையே மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 11 வீடுகளை முறைகேடாக பெற்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    அரசு இலவச வீடுகள் வழங்கும் கிராமத்தை சேர்ந்த ‌ஷி என்ற பெண் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். அதனை தொடர்ந்து ‌ஷி தனது கிராமத்துக்கு திரும்பினார். இருவரும் விவாகரத்து பெற்ற 6 நாட்களுக்கு பிறகு அரசு இலவச வீடு திட்டத்தை அறிவித்தது.

    அதனை அறிந்த பான், விவாகரத்து செய்த தன் மனைவி ‌ஷியை மீண்டும் திருமணம் செய்துகொண்டு அந்த சான்றிதழை அரசிடம் காட்டி, தானும் இலவச வீட்டில் வாழ தகுதியை பெற்றார். அதன்படி பான்-‌ஷி தம்பதிக்கு அரசின் இலவச வீடு கிடைத்தது.

    அதனை தொடர்ந்து பான் தனது மனைவி ‌ஷியை மீண்டும் விவாகரத்து செய்துவிட்டு தனது அண்ணியை திருமணம் செய்துகொண்டு மற்றொரு வீட்டை பெற்றார். அதன் பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு அண்ணியின் தங்கையை திருமணம் செய்து 3-வது இலவச வீட்டை வாங்கினார்.

    அதேபோல் பானின் தந்தையும் குடும்ப உறுப்பினர்களையே பல முறை திருமணம் செய்து இலவச வீடுகளை பெற்றார். அதிலும், அவர் ஒரு படி மேலே சென்று இலவச வீட்டுக்காக தன்னுடைய தாயையே திருமணம் செய்துகொண்டார். இப்படி பானின் குடும்பத்தில் உள்ள 11 பேர், தங்களுக்குள்ளேயே 23 முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றுள்ளனர்.

    அதன் மூலம் இந்த குடும்பத்துக்கு 11 இலவச வீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடித்த கிராம மேம்பாட்டு அதிகாரிகள், பான் குடும்பத்தினரின் மோசடி தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் பான் குடும்பத்தினர் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பான், அவரது மனைவி மற்றும் தந்தை உள்பட 11 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து இந்த மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்த 4 பேரைத் தவிர, மற்ற 7 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×